செய்திகள்

பாடசாலை நிகழ்வுகளில் மத்திய மாகாண விவசாய அமைச்சரின் அரசியல் பேச்சால் குழப்பநிலை என்று குற்றச்சாட்டு

மத்திய மாகாண விவசாய அமைச்சர் பாடசாலை நிகழ்வுகளில் அரசியல் பேசுவதுடன் பாடசாலை கல்வி சமூகத்தின் மத்தியில் குழப்பத்தை விளைவிப்பவரா செயற்படுவது கண்டிக்கத்தக்கது என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் சிங்.பொன்னையா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

கல்வி இராஜாங்க அமைச்சரின் அழைப்பின் பேரிலும் மத்தியமாகாண முதலமைச்சரின் பணிப்புரைக் கேற்பவும் அட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த காபெக்ஸ் , புளியாவத்தை ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தொழினுட்ப ஆய்வு கூடங்களைத் திறக்கும் நிகழ்வுகளில் நானும் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டோம்.

காபெக்ஸ் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய மாகாண விவசாய அமைச்சர் ராமசாமி மாணவர் மத்தியில் அரசியல் கருத்துக்களைக் காரசாரமாக வெளியிட்டதோடு அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தினை விமர்சித்தார்.

தனி வீட்டுத்திட்டம் , பசுமை பூமி காணி உறுதிப்பத்திரம் போன்றன தொடர்பிலும் பிழையான கருத்துக்களை மாணவர் முன்னிலையில் கூறினார். அத்துடன் கல்வி இராஜாங்க அமைச்சரின் செயற்பாடுகளையும் அவர் முன்னாலேயே விமர்சித்தார்.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த மாணவர்களும் ஏனையவர்களும் விசனமடைந்தனர். இதனைத் தொடர்ந்து புளியாவத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற நிகழ்வுக்குச் சென்றோம். அந்தப்பாடசாலையின் அதிபர் வரவேற்புரையில் மாகாணசபை உறுப்பினர்களாகிய எமது பெயரை விளிக்கவில்லை , அத்துடன் உரையாற்றுவதற்கும் அழைக்கவில்லை. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மத்திய மாகாண விவசாய அமைச்சர் இந்தப்பாடசாலையில் உரையாற்றும் போது தொடர்ந்து அரசியல் ரீதியான கருத்துக்களை முன்வைத்ததால் கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோரில் ஒருவர் எழும்பு நின்று தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு பாடசாலை நிகழ்வில் அரசியல் பேச வேண்டாமென கூறினார்.

இதனைத் தொடர்ந்து நான் உரையாற்றும் போது அதிபர் விட்ட தவறை நான் சுட்டிக்காட்டிய போது விவசாய அமைச்சரின் இணைப்பாளர் ஒருவர் பாடசாலை ஆசிரியர்களை வெளியேறுமாறு கூறி அவர்களை வெளியேற்றினார். நான் எவ்விதமான தகாத வார்த்தைகளும் கூறவில்லலை. குறிப்பிட்ட பாடசாலையின் அதிபரின் செயற்பாடு குறித்தும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும்  மத்திய மாகாண முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன்.