செய்திகள்

“பாடுமீன்கள் சமர்” – விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டி –வெளியேறிச்சென்ற மத்திய கல்லூரி அணி

மட்டக்களப்பின் சமர் என வர்ணிக்கப்படும் மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் புனித மைக்கேல் கல்லூரிக்கும் இடையிலான பாடுமீன்கள் சமர் கிரிக்கட் சமரில் கடும் போட்டிகளுக்கு மத்தியில் புனித மைக்கேல் கல்லூரி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்று காலை ஆரம்பமான கிரிக்கட் சமரில் முதலில் மெதடிஸ்த மத்திய கல்லூரி துடுப்பெடுத்தாடியது.39.4 பந்துவீச்சு ஒவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 168 ஓட்டங்களை மத்திய கல்லூரி பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித மைக்கல் கல்லூரி அணி மிகவும் சிறப்பான முறையில் துடுப்பெடுத்தாடி வந்த நிலையில் இறுதி மூன்று ஓவர்கள் மிகவும் சுவாரசியமான போட்டியாக இருந்தது.

இதன்போது இறுதி பந்தில் நான்கு ஓட்டங்கள் பெறவேண்டும் என்ற நிலையில் துடுப்பாட்ட வீரர் பந்தை வேகமாக விளாசியபோது பந்து எல்லைக்கோட்டை நோக்கிச்சென்றபோது அப்பகுதியில் நின்ற ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழைந்ததினால் போட்டி தொடர்பில் இரு பாடசாலை ஆதரவாளர்களிடையே முரண்பாடுகள் எழுந்தன.

இந்த நிலையில் இது தொடர்பான முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் நடுவர்களிடமே நிலைமை ஒப்படைக்கப்பட்ட நிலையில் இறுதிப்பந்தில் நான்கு ஓட்டங்கள் பெறப்பட்டதாக நடுவர்களினால் அறிவிக்கப்பட்ட நிலையில் போட்டியின் வெற்றி புனித மைக்கேல் கல்லூரி வசம் சென்றது.

எனினும் தமது களத்தடுப்பாளர்கள் குறித்த பகுதியில் இருந்தபோதிலும் நான்கு ஓட்டத்தினை தடுக்ககூடிய வாய்ப்பு இருந்தபோதிலும் புனித மைக்கேல் கல்லூரி ஆதரவாளர்கள் தமது வெற்றியை தடுத்துவிட்டதாக மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி வீரர்கள் தெரிவித்தனர்.

எனினும் புனித மைக்கேல் கல்லூரி இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சம்பியனாக மெதடிஸ்த மத்திய கல்லூரி இருந்துவந்த நிலையில் இந்த ஆண்டு புனித மைக்கேல் கல்லூரி தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இதன்போது இன்றைய சமரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வீரர் கே.அபிஷேக்கும்,சிறப்பாட்டக்காரராக புனித மைக்கேல் கல்லூரியை சேர்ந்த ரி.நிலுக்காந்தும் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை வழங்கிவைத்தார்.

இறுதிப்பரிசளிப்பு நிகழ்வினை மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி மாணவர்கள் மற்றும் மாணவர்கள் பகிஸ்கரித்து மைதானத்தினை விட்டு வெளியேறிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_0004 IMG_0008 IMG_0013 IMG_0037 IMG_0044 IMG_0046 IMG_0048 IMG_0056 IMG_0079 IMG_0085 IMG_0099 IMG_0103