செய்திகள்

பாணந்துறை பிரதேச சபையின் எதிர்க் கட்சித்தலைவர் கைது

பாணந்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாணந்துறை, கெசெல்வத்தை பொதுச் சந்தை கட்டிடத்தின் ஒப்பந்தகாரர் தொடர்பில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறு காரணமாகவே எதிர்க் கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான ருவான் குணசேகர குறிப்பிட்டார்.

எனினும் எதிர்க்கட்சித் தலைவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொதுச் சந்தை கட்டிடத்தின் ஒப்பந்தக்காரரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சந்தைத் தொகுதி நேற்று முன்தினம் திறந்து வைக்கப்படவிருந்த சந்தர்ப்பத்தில் அதிதிகள் வருகைக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் அதனைத் திறப்பதற்கு முற்பட்டதை  அடுத்து சர்ச்சை  ஏற்பட்டுள்ளது.

இந்தச் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஒப்பந்தக்காரருக்கும் பாணந்துறை பிரதேச சபையின் எதிர்க் கட்சித் தலைவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதுடன் இரு தரப்பினாலும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பேரும் பொலிஸ் கண்காணிப்பின் கீழ் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பாணந்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.