செய்திகள்

பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு பல்வேறு நாடுகளிலிருந்து மீட்பு குழுக்கள்

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மீட்பு குழுக்கள், மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நேபாளத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் சீர்குலைந்து போயுள்ளன. சாலைகளில் பெரும் விரிசல்கள் ஏற்பட்டு இருப்பதால், காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக மின்சாரம், தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நேற்றிரவு முதல் திறந்த வெளிகளில் தங்கியுள்ள மக்கள், உணவு, தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருன்றனர். சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்து இருப்பதால், சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகி இருப்பதால், காத்மாண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலைமை மோசமடைந்துள்ளது. இதனிடையே, நேபாளத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வரும் இந்தியா அதற்கு ஆபரேஷன் மைத்ரி என்று பெயரிட்டுள்ளது.

மீட்பு குழு ஒன்றை அனுப்பி வைத்துள்ள அமெரிக்கா, ஒரு மில்லியன் டாலர் மதிப்புள்ள நிவாரண பொருட்களையும் அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளது. இதனிடையே கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்பு படையினருடன் பொதுமக்களும் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு நாடுகளில் இருந்து உயிர் காக்கும் மருத்துகளும் அனுப்பப்பட்டு வருகின்றன.