செய்திகள்

பாதுகாப்பு அமைச்சர் ரூவான் இன்று யாழ். செல்கிறார்: பாதுகாப்பு நிலைமையை ஆராய்வார்

மைத்திரிபால அரசாங்கத்தின் புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்த்தன வடபகுதியின் பாதுகாப்பு நிலைமைகளை நேரில் ஆராய்வதற்காக இன்று யாழ்ப்பாணம் செல்கின்றார். 3 தினங்கள் வடபகுதியில் தங்கியிருக்கும் அவர், முக்கியமான அறிக்கை ஒன்றை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளார்.

இன்று யாழ்ப்பாணம் செல்லும் இராஜாங்க அமைச்சர் பலாலி படைத் தலைமையகத்தில் இடம்பெறும் முக்கிய கூட்டத்தில் கலந்துகொள்வார். இதனையடுத்து நாளை சனிக்கிழமை கிளிநொச்சி செல்லும் அவர், நாளை மறுதினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் செல்வார்.

மூன்று மாவட்டங்களிலும் பாதுகாப்பு நிலைமைகள், உயர் பாதுகாப்பு வலயத்தை குறைப்பது, அந்தப் பகுதிகளில் மக்களின் மீள்குடியேற்றம் என்பன தொடர்பாக இராணுவ அதிகாரிகளுடன் விரிவாக ஆராய்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த வார முற்பகுதியில் இந்த விபரங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை அமைச்சர் முன்வைப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் மீள்குடியேற்றம் என்பன தொடர்பில் இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.