செய்திகள்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவானின் அதிகாரம் குறைப்பு! மைத்திரி அதிரடி

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்த்தனவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் குறைக்கும் வகையிலான விஷேட வர்த்தமானிப் பிரகடனம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருக்கின்றார். வெள்ளிக்கிழமை இரவு இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி, பாதுகாப்புச் சேவைகள் கட்டளைப் பணியகம், ரணவிரு சேவை அதிகாரசபை, பாதுகாப்பு சேவைகள் பாடசாலை போன்றவற்றை கண்காணித்தல் மற்றும் மேற்பார்வையிடுவதற்கான அதிகாரம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடமிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றது.

பெப்ரவரி 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயத்துக்கு முன்னதாகவே இந்த நடவடிக்கை அவசரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.  வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கான விஜயத்தை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கொண்டிருந்த போது இந்த அதிகாரங்கள் அவருக்கு இருந்தன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மிகவும் நெருங்கிய உறவினரான ரூவான் விஜயவர்த்தனவை கட்சியின் தலைமைப் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க தயார் செய்துவருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்புத்துறைக்குப் பொருத்தமற்றவர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சில தினங்களுக்கு மு;னர் குற்றஞ்சாட்டியிருந்தார்.