செய்திகள்

பாரம்பரிய இனத்துவ-தேசியவாதத்தின் தோல்வி?

யதீந்திரா
இலங்கையின் பொருளாதார நெருக்கடி, இனத்துவ மற்றும் மதப்பிணைப்பு தேசியவாதம் தொடர்பில் கேள்விகளை முன்நிறுத்துகின்றது. கோட்டபாய ராஜபக்சவின் வெற்றியானது, சிங்கள பௌத்த-தேசியவாதத்தின் மீளெழுச்சியாகவே நோக்கப்பட்டது. கோட்;டபாயவும், சிங்கள-பௌத்த இனத்தின் நவீன காவலானாகவே தன்னை முன்னிறுத்திக்கொண்டார். இந்த பின்புலத்தில்தான், தன்னையொரு சிங்கள-பௌத்த தலைவனாக பிரகடணம் செய்தார். நான்தான், நீங்கள் தேடிய தலைவன் என்றார். இவைகளெல்லாம் சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் எழுச்சிக்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் புத்துணர்வையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

கோட்டபாய ஒரு விடயத்தை திரும்பத்திரும்ப வலியுறுத்திக் கொண்டிருந்தார். அதாவது, தமிழ் மக்களுக்கென்று பிரத்தியேக அரசியல் பிரச்சினைகள் இல்லை – அவர்களுக்கு பொருளாதார பிரச்சினைகள் மட்டும்தான் இருக்கின்றது. இந்த அடிப்படையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தையான, 13வது திருத்தச்சட்டத்தை கூட நீக்க வேண்டுமென்பதில் கோட்டபாய ஆசை கொண்டிருந்தார். இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஸ் வர்தன், முன்னிலையிலேயே, 13வது திருத்தச்சட்டத்தில் பிளசும் மைனசும் இருப்பதாக குறிப்பிட்டார். இதன் மூலம், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாதென்பதை சூசகமாக வெளிப்படுத்தினார்.

கோட்டாவின் அணுகுமுறைகளை, லிபியாவின் சர்வாதிகாரியாக இருந்த முகமத் கடாபியின் கருத்தியலோடு ஒப்பிட்டலாம். கடாபியின் பார்வையில், தேசமென்பது, ஒரு பெரிய பழங்குடி – அதாவது ஒரு பெரிய குடும்பம் – அவ்வாறானதொரு குடும்பத்திற்கு பிரத்தியேக அதிகாரப்பகிர்வு மற்றும் பிரத்தியேக நிர்வாக நடைமுறைகள் அவசியமில்லை. ஆனால் கடாபிக்கும் கோட்டபாயவிற்கும் இடையில் ஒரு அடிப்படையான வேறுபாடுண்டு. அதாவது, கோட்டபாயவின் பார்வையில் சிறிலங்கா (அப்பே ரட்ட) என்பது, ஒரு பெரிய சிங்களப் பழங்குடி அல்லது பெரிய சிங்கள குடும்பம். இந்த கருத்தியலிலிருந்துதான், தமிழ் மக்களுக்கென்று பிரத்தியேக பிரச்சினைகள் இல்லையென்னும் கோட்டபாயவின் பார்வை வடிவம்பெற்றது.

ஆனால் இன்றைய நிலைமை என்ன? தமிழ் மக்களுக்கு பொருளாதார ரீதியான பிரச்சினை மட்டும்தான் இருப்பதாக குறிப்பிட்ட, கோட்டபாய ராஜபக்ச, சிங்கள மக்களின் பொருளாதார பிரச்சினைகளை கையாள முடியாமல் படு தோல்வியடைந்திருக்கின்றார். அன்னிய சக்திகளுக்கு நாட்டை காட்டிக் கொடுக்க முற்படுவதாக எவர் மீது, விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதோ, இப்போது, அந்த ரணில் விக்கிரமசிங்கவின் தயவின் மூலம்தான் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்ல முடியுமென்னும் நிலைக்கு கோட்;டபாய கீழிறங்கியிருக்கின்றார்.

உண்மையில் கோட்டபாய ராஜபக்சவின் தோல்வியென்பது – கோட்டபாயவின் தோல்வியல்ல – மாறாக, அவர் பிரதிநித்துவப்படுத்திய சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் தோல்வியாகும். ஒரு நெருக்கடி நிலையில் நாட்டை தூக்கிநிறுத்துவதற்கு சிங்கள-பௌத்த தேசியவாதம் கைகொடுக்கவில்லை. ஏனெனில், உலகத்தோடு ஊடாடகக் கூடிய ஆற்றலை சிங்கள-பௌத்த தேசியவாதம் கொண்டிருக்கவில்லை. ஏனெனில், அது, தாராளவாத விழுமியங்களை கண்டு அஞ்சுகின்றது. இலங்கையின் பௌத்த பீடங்கள் கிட்டத்தட்ட, காவிதரித்த தலிபான்கள் போன்றே செயற்படுகின்றனர்; இலங்கைத் தீவை கற்கால நிலையில் பேணிப்பாதுகாக்கவே விரும்புகின்றனர். இலங்கை முன்நோக்கி பயணிப்பதை ஏதோவொரு வகையில் தடுக்கும் சக்திகளாகவே தொழிற்படுகின்றனர். இதன் விளைவுகளையே, தற்போது இலங்;கைத் தீவு எதிர்கொண்டுவருகின்றது.

இலங்கையின் தேசியவாதங்களின் எழுச்சியை உற்று நோக்கினால் – ஒரு அடிப்படையான உண்மையை நாம் காணலாம். அதாவது, இனவெறுப்பே, தேசியவாத எழுச்சியின் அஸ்திபாரமாக இருப்பதை காணலாம். இது தமிழ் தேசியவாதத்திற்கும் பொருந்தும். ஆனால் ஆரம்பகால தமிழ் தேசிய எழுச்சியானது, சாதாரண சிங்கள மக்களை எதிர்ப்பதாக இருக்கவில்லை. சிங்கள மக்களையும் சிங்கள ஆளும் வர்கத்தையும் பிரித்து நோக்குவதாகவே இருந்தது. சிங்கள மக்களுடன் கூடிவாழும் வாழ்வையே அவாவிநின்றது.

ஆனால் தமிழ் தேசிய அரசியல் ஆயுதமயப்படுத்தப்பட்ட பின்னர் – அதாவது, ஆயுதபலத்தின் மூலம்தான் உரிமைகளை வென்றெடுக்க முடியுமென்னும் அரசியல் புறநிலைமை உருவாகிய பின்னர், முன்னைய அணுகுமுறைகள் மாற்றமடைந்தது. சிங்கள ஆளும் வர்க்கத்தையும் சிங்கள மக்களையும் பிரித்து நோக்கவேண்டியதில்லை என்னும் பார்வை மேலோங்கியது. குறிப்பாக, விடுதலைப் புலிகளின் தலைமையிலான ஆயுத போராட்டத்தின் போது, சிங்கள மக்களும் சிங்கள அரசியல் சமூகமும் வேறுவேறல்ல என்னும் பார்வை மேலோங்கியது. இராணுவ நெருக்கடிகள் அதிகரிக்கின்ற போது, சிங்கள பொதுமக்களையும் இராணுவ இலக்காகக் கொள்ளலாமென்னும் பார்வை அரசியல்மயப்படுப்பட்டது. இந்த கருத்தியலின் அடிப்படையி;ல்தான், விடுதலைப் புலிகளால், சிங்கள பொது மக்கள் மீது, மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நோக்க வேண்டும். விடுதலைப் புலிகள் காலத்தைய தமிழ் தேசியவாத எழுச்சியென்பது, சிங்கள எதிர்ப்பின் உச்சமாகவே இருந்தது. சிங்களவர்களோடு சேர்ந்து வாழமுடியாதென்பதே விடுதலைப் புலிகள் தலைமையிலான தமிழ் தேசிய நிலைப்பாடாகும்.

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியோடு, விடுதலைப் புலிகளால் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் தேசியவாதமும் பெருமளவிற்கு வீழ்சியுற்றுவிட்டது. இன்றைய தமிழ் தேசியவாத அரசியல் ஆரம்பகால மிதவாத தமிழ் தேசிய நிலைப்பாட்டையே பிரதிபலிக்கின்றது. அதாவது, ஜக்கிய இலங்கைக்குள் வாழும் நிலைப்பாடு. ஆனால் போர் வெற்றிவாத ராஜபக்சக்களினால் புத்தொழுச்சிபெற்ற சிங்கள-பௌத்த தேசியவாதமோ, மீளவும், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை காலால் மிதித்தது.

மீளவும் தமிழர் வெறுப்பை தெற்கில் பரப்பி, தாங்கள் தொடர்ந்தும் அதிகாரத்திலிருப்பதற்கான தந்திரேபாயங்கள் தொடர்பிலேயே ராஜபக்சக்கள் சிந்தித்தனர். 2019தேர்தல் வெற்றியை தொடர்ந்து, கோட்டபாய ராஜபக்ச, மகிந்தவின் காலத்து இனவெறுப்பு சிங்கள-பௌத்த தேசியவாதத்தை அதன் இரண்டாம் நிலைக்கு எடுத்துச் செல்ல முற்பட்டார். உள்ளுரில் அதிகாரத்தை கைப்பற்றுதலென்னும் ஒரேயொரு இலக்கை மட்டுமே கொண்டு கையாளப்பட்ட சிங்கள-பௌத்த தேசியவாத கருத்தியல், புதிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போது, வெறும் புஸ்வானமென்னும் உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது. அந்த வகையில் சிங்கள-பௌத்த தேசியவாதத்தால் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்ல முடியாதென்னும் உண்மையும் இப்போது பட்டவர்த்தனமாகியிருக்கின்றது.

இப்போது இரண்டு தேசியவாதங்களின் வீழ்ச்சியனுபவம் இலங்கைக்கு கிடைத்திருக்கின்றது. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை தொடர்ந்து, பிரிவினைவாத தமிழ் தேசியவாதம் வீழ்சியுற்றது. ராஜபக்சக்களின் வீழ்ச்சியை தொடர்ந்து, பாரம்பரிய தமிழர் விரோத சிங்கள- தேசியவாதத்தின் தோல்வி வெளிப்பட்டிருக்கின்றது. மேற்படி, இரண்டு தோல்வி அனுபவங்களிலிருந்தும் கற்றுக்கொள்வதன் மூலம்தான் இலங்கைத் தீவு முன்னோக்கி பயணிக்க முடியும். இதில் அதிக கடப்பாடும், பொறுப்புணர்வும், பெரும்பாண்மையினர் என்னும் வகையில், சிங்கள புத்திஜீவிகளுக்கும், சிங்கள சிவில் சமூகத்தினருக்குமே உண்டு. சிலர் இவ்வாறானதொரு வாதத்தை முன்வைக்கலாம் மீளவும் ராஜபக்சக்கள் எழுச்சியுற்றால் என்ன செய்வது? பதில் இலகுவானது, ராஜபக்சக்கள் போன்ற அரசியல் குழுவினரால், ஒரு போதும், தாராளவாத சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைக்க முடியாது. இன வெறுப்பும், மதவாதமுமே அவர்களது அரசியல் மூலதனமாக இருக்கும். அவ்வாறானவர்கள் எழுச்சியுற்றால், இப்போது நாடு என்ன நிலையிலிருக்கின்றதோ – அதுவே மீளவும் நிகழும். இலங்கைக்கு – சிங்களவர்களுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கும், தராளவாத சிந்தனைகளை முன்னிறுத்தக் கூடிய, உலகத்தோடு ஊடாடக்கூடிய, தலைமைகளே தேவை. கடுப்போக்கு வாதங்கள் ஒருபோதுமே பயனளிக்காது. தேசியவாதம் தொடர்பான புதியதொரு உரையாடல் தமிழ் சூழலுக்கு தேவை.