செய்திகள்

பாராளுமன்றக் கலைப்புக்கு முன்னர் ஐ.ம.சு.மு. அரசு உருவாகும்; நிமல் நம்பிக்கை

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக தங்களது அரசாங்கத்தை மீண்டும் உருவாக்கிக் கொள்வோம் என்று தெரிவித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதற்கு சுதந்திர முன்னணியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்த ஆட்சேபத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மட்டுமன்றி அக்கட்சி அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கும் நிலையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு விட்டதன் காரணமாகவே அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரும் நடவடிக்கைகளை எதிர்க்கட்சி முன்னெடுத்து வருவதாக இதன்போது தெரிவித்த சுசில் பிரேமஜயந்த, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவிருப்பதாகவும் தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமொன்றை ஏற்படுத்திக் கொள்வோம் என்றும் கூறினார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் 14 கட்சிகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம், பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் புதன்கிழமை நடைபெற்ற சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அபிப்பிராயம் என்னவாக இருந்தது? அவர் ஆட்சேபம் எதனையும் வெளியிடவில்லையா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுசில் பிரேமஜயந்த;

‘அதை (நம்பிக்கையில்லா பிரேரணை) கொண்டு வர வேண்டாம் என்று எதையும் ஜனாதிபதி கூறவில்லை. நம்பிக்கையில்லாõ“ தீர்மானம் பற்றி பாராளுமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும்.

ஆகையால், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஆகிய இரண்டையும் எப்போது, எப்படி விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது என்பது தான் இங்குள்ள பிரச்சினை’ என்று தெரிவித்தார்.

இதேநேரம், எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பதுளை மாவட்ட எம்.பி.யுமான நிமல் சிறிபால டி சில்வா இங்கு பேசுகையில்;

‘அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க ஆகிய இருவருக்கும் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைகளும் அதேபோல், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் இலஞ்ச, ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குவின் பணிப்பாளர் நாயகம் ஆகிய இருவரையும் பதவி நீக்கம் செய்யக் கோரும் பிரேரணைகளும் ஏற்கனவே பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் இருக்கின்றன.

இதேநேரம், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றும் கொண்டு வரவுள்ளோம். அதற்கென எம்.பி.க்களிடம் கையொப்பம் திரட்டும் நடவடிக்கைகளை எதிர்க்கட்சி மேற்கொண்டு வருகிறது.

நானும் அதில் நிச்சயம் கையொப்பமிடுவேன். விரைவில் அது பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்வாங்கப்படும். பின்னர் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமைய விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

அதுமட்டுமல்லாது, பிரதமருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டு வரப்படவுள்ளது. எனினும், சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பொறுத்த வரையில் கொள்கை ரீதியில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தமும் நிறைவேற்றப்பட வேண்டும் என்கின்ற அதேநேரம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஆகவே, 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு தடங்கல் ஏற்படாத வகையிலேயே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும். அது தொடர்பில் நாம் எமது பாராளுமன்றக் குழுவில் கூடி ஆராய்வோம்.

இதேநேரம், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற அமர்வில் எடுத்துக் கொள்ள கடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் கேட்ட போது அரசாங்கம் அதற்கு இடமளிக்காததுடன், அதில் தாமதத்தையும் ஏற்படுத்தியது.

இது தொடர்பில் இன்னும் ஓரிரு தினங்களில் தெரிவிப்பதாக சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார். அந்த வகையில், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஜூன் மாதம் 3 ஆவது வாரத்தில் எடுத்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று அவர் என்னிடம் தெரிவித்துள்ளார். நாம் இது பற்றி அடுத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசுவோம்’ என்று கூறினார்.