செய்திகள்

பாராளுமன்றக் கலைப்பு தேர்தல் முறை மாற்றத்தின் முன்னரா? பின்னரா? தொடர்ந்து இழுபறி

புதிய தேர்தல் முறை அமுலுக்கு வந்த பின்னரே பொதுத் தேர்தல் நடத்தப்படுமென அமைச்சரவையில் ஆராயப்படவோ, தீர்மானம் எடுக்கப்படவோ இல்லையெனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சிப் பேச்சாளரும் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்வின் கூற்றுப்படி எதுவும் அமைச்சரவைக் கூட்டத்தில் இடம்பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் இன்னமும் இறுதிமுடிவெதுவும் எட்டப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் ஊடக மாநாட்டில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

தற்போது நடைமுறையில் இருந்துவரும் விருப்புவாக்கு தேர்தல் முறையை ஒழிக்க வேண்டுமென்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும். அதற்கு அரசியலமைப்பு மாற்றத்துடன் கூடியதான தேர்தல் முறையில் மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்படவேண்டும்.

எவ்வாறாக இருந்த போதிலும் 100 நாள் வேலைத்திட்டம் முடிவடைந்தவுடன் தேர்தலை நடத்த உறுதிபூண்டுள்ளோம். அதன் பிரகாரம் பொதுத் தேர்தல் நடத்தப்படும். அவ்வாறான சூழ்நிலையில் சிலவேளை பொதுத் தேர்தல் தாமதமாகவும்கூடும். எனினும் 100 நாள் வேலைத்திட்டம் நிறைவடைந்த உடனேயே தேர்தலை நடத்த வேண்டுமென்பதில் ஐக்கிய தேசியக் கட்சி உறுதியான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றது.

இந்த விடயத்தில் இறுதித் தீர்மானம் எடுப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய பங்கை வகிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. அதேநேரம் தேர்தல் மறுசீரமைப்பு, அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி சகல கட்சிகளுடனும் பேசத் தீர்மானித்துள்ளது. அடுத்த வாரத்தில் இது தொடர்பான முதற்கட்டப் பேச்சுக்கள் இடம்பெறலாம்.

முதலில் ஆட்சியில் இருக்கும் ஐ.தே.க. சுதந்திரக்கட்சிகளுக்கிடையிலான உயர்மட்டச் சந்திப்பு இடம்பெறும். ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை அடுத்து இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசியலமைப்புத் திருத்தத்துடன் சமகாலத்தில் தேர்தல் மறுசீரமைப்பும் இடம்பெற வேண்டுமென்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி இந்த இரண்டும் தனித்தனியே இடம்பெற வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருக்கின்றது. இந்த விடயத்தில் இரண்டு கட்சிகளும் இணக்கப்பாடொன்றை எட்டியதன் பின்னர் ஏனைய கட்சிகளுடன் பேசத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக்கட்சியில் இருக்கும் பெரும்பான்மையானோர் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேனவைக் கடுமையாக விமர்சித்தவர்களாவர். இன்று அவரை சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி எனக் கூறிவருகின்றனர். அப்படி அழைப்பதற்கு அவர்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. கூடவோ குறையவோ, மைத்திரிபால ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி என்பதை எம்மால் எவ்வித தயக்கமுமின்றிக் கூற முடியும் எனவும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.