செய்திகள்

பாராளுமன்றத்தை கலைக்காது ஐ.ம.சு,கூவை சேர்ந்தவரை பிரதமராக நியமியுங்கள் : மஹிந்த தரப்பு எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை

பாராளுமன்றத்தை கலைக்காது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழான அரசாங்கத்தை அமைத்து 20வது அரசியலமைப்பு திருத்தத்தை அமைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துமாறு மஹிந்த ஆதரவு தரப்பு எம்.பிக்கள் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிடம் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினரே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ளனர்.இவ்வாறாக 126 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதனால் அந்த கட்சியை சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும். இதன்படி நிமல் சிறிபால டி சில்வா , தினேஸ் குணவர்தன அல்லது ஜோன் செனவிரட்ன ஆகியோரில் ஒருவரை நியமிக்க வேண்டும்.

இதன் மூலம் பாராளுமன்றத்தை கலைக்காது தற்போதைய பாராளுமன்றத்திலேயே 20வது திருத்தத்தை நிறைவேற்ற முடியும்.இதன்படி அதனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற மஹிந்த ஆதரவு தரப்பு எம்.பிக்களின் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய டலஸ் அழகப்பெருமவே இதனை தெரிவித்துள்ளார்.