செய்திகள்

பாராளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படும்?

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய, எதிர்வரும் தேர்தலை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில், தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் சட்டமாஅதிபர் ஆகியோருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடியுள்ளார். அவர்களின் அறிக்கை இன்னும் இருவாரத்துக்குள் கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.

இதற்கமையவே, புதிய தேர்தல் முறைமைக்கு அமைய தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் சுட்டிக்காட்டினார். தற்போதைய பாராளுமன்றத்தை ஏப்ரல் 23ஆம் திகதி கலைப்பதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்து. எனினும், தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தினால் பாராளுமன்ற தேர்தலை உரிய திகதியில் நடத்தமுடியாத நிலைமையொன்று ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலப்பு மற்றும் விகிதாசார முறைமையின் கீழ் தேர்தல் நடத்துவதற்காக கடந்த அரசாங்க ஆட்சியின் போது அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் –