செய்திகள்

பாராளுமன்றம் ஏப்ரல் 23 இல் கலைக்கப்படும்: மாற்றமில்லை என்கிறார் ரவி

பாராளுமன்றம் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி கலைக்கப்படும் என்று தெரிவித்துள்ள நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, பாராளுமன்றத்தில் முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்றி கொள்வதற்காகவே  ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களையும் இணைந்துகொண்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சில சட்டமூலங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவைப்படுகின்றது. புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காகவே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. அந்த திட்டம் நடைமுறையில் இருக்கின்றது. அவை 100 நாட்களுக்குள் நிறைவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

100 நாட்கள் வேலைத்திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஜூன் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் போது ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.