செய்திகள்

பாராளுமன்ற அமைதியின்மை தொடர்பில் ஆராயக் குழு நியமனம்!

பாராளுமன்றத்தில் கடந்த வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் 10 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குழுவின் உறுப்பினர்களாக எம்.ஏ. சுமந்திரன், ரவூப் ஹக்கீம், வாசுதேவ நாணாயக்கார, சுசில் பிரேமஜயந்த, கயந்த கருணாதிலக்க, பந்துல குணவர்தன, அனுர பிரியதர்ஷன யாப்பா, விஜித்த ஹேரத், ரஞ்சித் மத்துமபண்டார, சமல் ராஜபக்ஸ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு உரையாற்றுவதற்காக மேலதிக நேரத்தை ஒதுக்குவது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து சனிக்கிழமையும் சபையில் சர்ச்சை ஏற்பட்டதுடன், அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியினர் சபை நடவடிக்கைகளை புறக்கணிக்க தீர்மானித்திருந்தனர்.

இதன்படி அவர்கள் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சபைக்கு வருகை தந்திருக்கவில்லை. இதனையடுத்து சபையில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-(3)