செய்திகள்

பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமையவே இந்தியப் பிரதமர் மோடியின் உரை

பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமையவே இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றவிருப்பதாகத் தெரிவித்த ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவிதான இவ்விடயம் பாராளுமன்ற நடைமுறைகளுக்கு முரண்பட்டதல்லவெனவும் குறிப்பிட்டார்.

ஊடக அமைச்சுக் கேட்போர்கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றவிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. ஒரு வெளிநாட்டுத் தலைவர் இலங்கைப் பாராளுமன்றத்தில் எவ்வாறு உரையாற்ற முடியும் என்று ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ஊடக அமைச்சின் செயலாளர் கரு பரணவிதான;

உலக நாடுகளின் தலைவர்கள் பிறிதொரு நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளும்போது அந்த நாட்டின் பாராளுமன்றத்தின் விசேட அமர்வில் பங்கேற்று உரையாற்றுவது சம்பிரதாயபூர்வமானதாகும். இது வழமையாக நடக்கும் விடயமாகும்.

இதற்கு முன்னர் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த மார்கரட் தட்சர், பிலிப்பைன்ஸ் பிரதமர் உட்பட பலர் உரையாற்றியிருக்கின்றனர். இதனடிப்படையிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வெள்ளியன்று உரையாற்றவிருக்கின்றார். இதில் எந்தவித தப்பும் கிடையாது எனத் தெரிவித்தார்.