செய்திகள்

பாராளுமன்ற பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதில் நெருக்கடி: தேசிய ஆலோசனை சபை தாமதம்

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதில் மைத்திரிபால அரசாங்கத்துக்கு உருவாகியிருக்கும் நெருக்கடியால் தேசிய ஆலோசனைச் சபையை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தின்படி கடந்த 12 ஆம் திகதி திங்கட்கிழமை தேசிய ஆலோசனை சபை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இருந்தபோதிலும், பாராளுமறப் பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதில் ஆளும் கட்சியினர் தீவிரமாக இறங்பியிருப்பதால், தேசிய அரசாங்கத்தை அமைத்துக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது ஆதரவைத் தெரியப்படுத்தியிருக்கின்ற போதிலும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதற்கு இது போதுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையைப் பெறுவதற்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். அடுத்துவரும் ஒரு சில தினங்களுக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக்கண்டுவிட முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு நெருக்கமானவர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றார்.