செய்திகள்

பாரிஸ் சிலம்புச் சங்கத்தின் ஒன்பதாவது பொங்கல் விழா

[youtube url=”https://www.youtube.com/watch?v=QINFRLG2vxU” width=”500″ height=”300″]

தமிழர்களின் தனித்துவ அடையாளமாக விளங்கும் திருநாளாம் பொங்கல் விழா உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரான்ஸ் நாட்டில் தமிழின அடையாளத்தை நிலைநிறுத்த தீவிர செயற்பாடுகளை மேற்கொண்டு கொண்டு வரும் சிலம்பு சங்கத்தினரால் புலம்பெயர் தமிழர் திருநாளின் ஒன்பதாவது நிகழ்வரங்கம் ஐனவரி 25ம் திகதி நிகழ்த்தப்பட்டது. தைப்பொங்கல் – தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் என்ற தொனியோடு பாரிசீன் வடக்கிலமைந்த புறநகரான சென் டெனி நகரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தமிழின் தனித்துவத்தை சிறப்பிக்கும் வகையில் சிலம்பு சங்கத்தினர் இவ்விழாவினை கருத்தரங்கமாகவும் நிகழ்வரங்கமாகவும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இரண்டவது நாளாக இடம் பெற்ற நிகழ்வரங்கத்தில் பொங்கலிடல், அகரம் எழுதல், கோலமிடல், தமிழர் உணவுக் கண்காட்சி,பொருட் கண்காட்சி போன்ற நிகழ்வுகளுடன் இலண்டன் வாழ் ஓவியர் சௌந்தரின் ஓவியக் கண்காட்சியும், சிறார்களுக்கான ஓவியப் பயிலரங்கமும் இடம்பெற்றிருந்தன.

கலை நிகழ்வுகள் ஆரம்பிகும் முகமாக அரங்கிற்கு வெளியே தோரணம் கட்டி புதுப்பானை வைத்து, புத்திரியிட்டு, சங்கொலி எழுப்பி, பொங்கலோ பொங்கல் என்ற ஆரவாரத்துடன் பொங்கற் பானை பறை வாத்திய இசையுடன் மேடைக்கு கொண்டு வரப்பட்டது. புலம்பெயர் சிறுவர்களின் காவடி ஆட்டம் முன்னே வர அரசன் அரசி வேடமிட்டு தமிழ் தலைமைத்துவத்தின் அடையாளத்துடன் பொங்கற் பானை மேடைக்கு சென்றமையும் பறை யோசையின் எழுச்சியும் பெருந்திரளான மக்களின் பொங்கலோ பொங்கல் என்ற ஆரவாரமும் அரங்கை திருவிழாக் கோலம் காண வைத்திருந்தமை சிறப்பாக விளங்கியது.

பாரிஸின் பிரதேச அதிகாரிகளும், சிறப்பு அதிதிகளாக முன்னைநாள் யாழ் பல்கலைக் கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சுப்பிரமணியன் அவர்களும் அவரது துணைவி இசைப் பேராசிரியை திருமதி கௌசல்யா சுப்பிரமணியன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

தமிழர்களின் பாரம்பரிய கலைவடிங்கான கரகம் காவடி போன்ற கிராமிய கலை நிகழ்சிகளுடன் கதை சொல்லலையும் மேடையில் அரங்கேற்றியிருந்தார்கள். தமிழினத்தின் தனித்துவ அடையாளப்படுத்தலை முதன்மைபடுத்தும் இவ்விழாவிற்கு இலண்டனைத் தளமாகக் கொண்ட தமிழ் அரங்கியற் காணொலிக்கலைமன்ற இயக்குனர்களும் தமிழர் நுண்கலை ஆற்றுகையாளர்களான திரு சாம் பிரதீபன் மற்றும் திருமதி றஜித்தா சாம் ஆகியோர் சிறப்பாக கலந்து கொண்டு தமிழர்களின் பாரம்பரியக் கலையாம் நாட்டுக்கூத்தின் பிரதேசரீதியான ஆட்டவடிவங்களின் விபரண ஆற்றுகையரங்கை நிகழ்த்தியிருந்தார்கள். இதனுடன் இசைக் கலைஞன் சந்தோஷ் குழுவினரதும்  புகழ்பெற்ற நடனக் கலைஞன் பிறேம் கோபாலுடைய மாணவர்களின் நடனமும் இடம்பெற்றிருந்தன.

இறுதியாக இசைக்கலைஞர் பரத்வாஜினால் உருவாக்கபட்ட “உள்ளம் தோறும் வள்ளுவம்”என்ற உலகப்பொதுமறையாம் திருக்குறளிசை இறுவெட்டு வெளியிடப்பட்டது.

பாரிஸின் பகுதி எங்கிலுமிருந்து தமிழர்கள் தமிழ் உணர்வோடு வருகை தந்து தமிழால் ஒருத்துவமாகி சாதி- மதம்- தேசம் கடந்த தமிழ்க் குடும்பங்களாக ஒன்றிணைந்து பிரான்சில் நடாத்தப்படும் பண்பாட்டு நிகழ்வரங்கமாக ‘தைப்பொங்கல்விழாவில் மகிழ்வோடு கலந்துசென்றமை குறிப்பிடத்தக்கது.