செய்திகள்

பாரிஸ் தாக்குதல்: ஆயுதங்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன?

பாரீஸ் நகரில் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்திலும், கொஷார் மார்க்கெட்டிலும் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதலுக்கு வெளிநாட்டில் இருந்து ஆயுதங்கள் வந்ததா என்ற கோணத்தில் விசாரணை மேகொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து ஏ.பி. செய்தி நிறுவனத்துக்கு பிரான்ஸ் நாட்டுப் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பாரீஸ் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கிறோம். மேலும், தாக்குதலுக்கு தேவையான பணமும் வெளிநாட்டில் இருந்தே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். எங்கள் காவல்துறையினர் பல்வேறு நாடுகளிலும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கேரியாவில் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிரான்ஸ் போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். தாக்குதலுக்கான சதித்திட்டமும் வெளிநாட்டில் இருந்தே வந்திருக்கிறது. பாரீஸில் தாக்குதலில் 6 தீவிரவாதிகள் ஈடுபட்டனர். இவர்களுடன் இன்னும் நிறைய பேர் இருந்திருக்கலாம் என்றே சந்தேகிக்கப்படுகிறது. யூத பள்ளிகள், கோயில்கள், மசூதிகள், மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் பகுதிகளில் 10,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்” என்றார்.

இதற்கிடையில், பிரான்ஸ் பிரதமர் மேனுவல் வால்ஸ் கூறுகையில் “பிரான்ஸ் தீவிரவாதத்துக்கு, ஜிஹாதுக்கு, இஸ்லாம் அடிப்படைவாதத்திற்கு எதிரான போரை துவக்கியுள்ளது. ஆனால் இந்த போர் எவ்வகையிலும் இஸ்லாத்துக்கு எதிரானது அல்ல. சிறையில் இருக்கும் இஸ்லாம் அடிப்படைவாதிகளையும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். உள் துறை அமைக்கம், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதிய வரையறைகளை விரைவில் வகுத்துக் கொடுக்க வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்.