பாவம் வெள்ளம்!
அதுவும் பாவம் தான்
ஆரிட்டை சொல்லியழும் ?!
கரிச்சுக் கொட்டாதையுங்கோ!
எரிச்சல் தாங்காமல் ;
ஏசிக் கொள்ளதையுங்கோ !!
பொறுத்துப் பொறுத்து
வெறுத்துப் போய்தான்
விம்மி வெடிச்சது வானம்!
அறுத்து உறுத்து …..
இறுத்து சொன்னது
அதுதான் நமக்கு பாடம்!
வாரித் தந்த மாரி மழை
வாரி இறைத்தது எனில்
யாரின் பிழை?
ஆறு குளமெல்லாம்
தூர் வாராததால்
வந்ததல்லோ இந்த வினை !
ஊரெலாம் வெள்ளத்தில……
உள்ளதெல்லாம் தண்ணிக்குள்ள…
விதைச்சதெல்லாம் சிதைச்சது!
முளைச்சதெல்லாம் அழிச்சது!
தேரை இழுத்து தெருவில விட்டது போல்
ஊரை ஒரு உலுப்பு உலுப்பி எடுத்தது!
கள்ளமண் எடுத்த பள்ளத்தில நீர் நிரவி
வள்ளம் விடுமளவு வெள்ளமடா !
மெள்ள மெள்ள வாய்க்காலையும் வடிகாலையும்
கள்ளத்தனமாக வளைத்துப் போட்டக்கால்
வெள்ளம் வடிந்தோடி எங்கே போகும் நீயும் சொல் ?
ஓடவும் முடியாமல் ஒழியவும் முடியாமல்
அடிபட்டு இடிபட்டு ஆக்கினைப்படுகுது !
வேண்டா வெறுப்பாய் முகம் சுழிச்சால்
நாண்டு கொண்டு சாக வெள்ளத்தால் முடியாது !
அதுவும் பாவம் தான்
ஆரிட்டை சொல்லியழும் ?!
ஒருக்கால் வழி விடுங்கோ
ஓடிப் போகட்டும் அதன் வழியில் !
பிறேமலதா