செய்திகள்

பிரச்சார கூட்டத்தில் தொண்டர்களிடம் வைகோ கோபம் அடைந்ததால் பரபரப்பு

ஆண்டிப்பட்டியில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தொண்டர்களிடம் வைகோ கோபம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தேமுதிக மக்கள்நலக் கூட்டணி தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணியில் இருக்கும் ஆண்டிபட்டி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போடி தொகுதி வேட்பாளர் வீரபத்ரன் ஆகியோரை ஆதரித்து தேமுதிக மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது கூட்டத்தில் பேசிய வைகோ, சட்டமன்றத்தில் மதுவை ஒழிக்காத முதல்வர் , தற்போது பெண்கள் கொந்தளிப்பான நிலையில் இருப்பதை அறிந்து தேர்தலுக்காக மதுவை படிப்படியாக ஒழிப்பேன் என்று ஜெயலலிதா சொல்வதாக குற்றம்சாட்டினார்.

இதனிடையே கூட்டத்தின் போது மேடையில் தொண்டர்கள் பலர் நின்றிருந்தனர். இதனால் கோபம் அடைந்த வைகோ பேச்சை நிறுத்தி தொண்டர்களை மேடையில் இருந்து இறங்குமாறு சத்தம்போட்டார். இதைதொடர்ந்து தொண்டர்கள் மேடையை விட்டு இறங்கினர்.

மீண்டும் வைகோ பேச்சை தொடர்ந்த போது வெயிலின் தாக்கம் தாங்காமல் தொண்டர்கள் சிலர் எழுந்து சென்றனர். அப்போது கோபம் அடைந்த வைகோ, 10 நிமிடம் கூட தங்களால் அமர முடியவில்லையா என வசைபாடினார்.

N5