செய்திகள்

பிரச்சினைகளையிட்டு ஆராய மலையகத் தலைவர்களை டில்லி வருமாறு மோடி அழைப்பு

மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அப்பகுதி தலைவர்களை டில்லிக்கு வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மலையக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நேற்றிரவு நடத்திய பேச்சுக்களின் போதே இந்த அழைப்பை அவர் விடுத்ததாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரரிவித்தார்.

இலங்கைகான இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த இந்தியப் பிரதமர் கொழும்பு மற்றும் வடபகுதிக்கு மட்டுமே சென்றிருந்தார். நாட்டின் கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளுக்கு அவர் வராதது வருத்தமும், ஏமாற்றமும் அளிப்பதாக உள்ளன என்று அந்தப்பகுதி அரசியல் தலைவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் இந்தியா புறப்படும் முன்னர் மலையகப் பகுதித் தலைவர்களை நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது மலையகப் பகுதி தொடர்பான தகவல்கள் மற்றும் தரவுகள் தன்னிடம் போதியமான அளவில் இல்லை என்றும், அவற்றை சேகரிக்கும் நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தங்களிடம் தெரிவித்தார் என அவரைச் சந்தித்த குழுவில் இருந்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதையடுத்தே அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்பில், மலையகத் தலைவர்களை டில்லி வருமாறு இந்தியப் பிரதமர் அழைப்பு விடுத்ததாக மனோ கணேசன் தெரிவித்தார்.

இலங்கையில் அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் இந்தியப் பிரதமர் சூசகமாக தங்களிடம் தெரிவித்ததாகக் கூறும் அவர், மலையகப் பகுதியில் 20,000 வீடுகளைக் கட்டித்தர இந்தியப் பிரதமர் உறுதியளித்ததாகவும் கூறினார்.

போதுமான நேரமின்மை மற்றும் பயண ஒழுங்கள் தொடர்பிலான பிரச்சினைகள் காரணமாகவே தன்னால் மலையகப் பகுதிக்கு வரமுடியவில்லை என்று மோடி அவர்கள் கூறியதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார். ஆனாலும் இந்திய வம்சாவளி மக்களின் நலன்களின் இந்தியா அக்கறை கொண்டுள்ளது என்பதையும் அவர் தங்களிடம் கூறியதாகவும் அவர் மேலும் கூறினார்.