செய்திகள்

பிரச்சினைக்குத் தீர்வைக்காண்பதில் தாமதங்களே மிஞ்சி நிற்கின்றன: முதலமைச்சர் செய்தி

வருடங்கள் வந்து போனாலும் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் தாமதங்களே மிஞ்சி நிற்கின்றன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதுவருடத்தை முன்னிட்டு அவளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருக்கின்றார்.

அவர் தமது செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

மன்மத வருடம் எங்களை விட்டுப் போக துர்முகி வருடம் ஆரம்பமாகின்றது. வருடங்கள் வந்து போனாலும் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் தாமதங்களே மிஞ்சி நிற்கின்றன. போரினால் பாதிக்கப்பட்ட எம்முடைய மக்களில் பலர் சொந்த வீடுகளுக்கும் காணிகளுக்கும் செல்லமுடியாது வேறு இடங்களில் பல சிரமங்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள். சிறையிலடைபட்ட எமது இளைஞர்கள் சிலரைத் தவிர மற்றையோர் இன்னமும் விடுபட்டபாடில்லை. போரின்போது தமது உற்றார் உறவினர்களைப் பறிகொடுத்த எம்மவர்கள் அவர்களுக்கு என்ன ஆனது எனத் தெரியாது தவிக்கின்றார்கள்.

இராணுவம் தொடர்ந்து இருந்து எம்மக்களின் வாழ்வாதாரத்தையும் வளங்களையும் வளைத்தெடுத்து நிற்கின்றது. எமது மீனவர்கள் கடலில் சென்று தமது தொழிலைச் செய்ய பல தடைகள் இடப்பட்டிருக்கின்றன. வெளிமாவட்டங்களிலிருந்து பலர் இராணுவ அனுசரணையுடன் எமது மாகாணத்திற்கு வந்து குடியேறுகின்றார்கள். குடிசனப் பரம்பலை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாகாண அரசாங்கத்தை மத்திய அரசாங்கம் உதாசீனஞ் செய்து தான்தோன்றித்தனமாகப் பல வேலைத்திட்டங்களைச் செய்து வருகின்றது.

இப்பேர்ப்பட்ட இன்னோரன்ன பல பிரச்சனைகளின் மத்தியில்த்தான் துர்முகி வருடம் உதயமாகின்றது. எம்முடைய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் இறைவன் அருளால் துர்முகி வருடத்தில் அவை தீர்க்கப்பட்டு மக்கள் வாழ்வு சுமூகமான முறையில் நடாத்தப்பட பிரார்த்திக்கின்றேன். வடமாகாண மக்கள் யாவரும் பெருவாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்.

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரித்தாகுக!

R-06