செய்திகள்

பிரதமரின் கருத்து நீதிமன்ற சுதந்திரத்துக்கு அழுத்தம்: சபையில் ரணில் இன்று பதில்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக பிரதமர் தெரிவித்திருந்த கருத்து குறித்து எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இது குறித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முழு மையான பதில் இன்று பாராளுமன்றத்தில் வழங்கப்படும் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

23/2 நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வி எழுப்பிய எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி நில்வா. கோத்தாபய ராஜபக்ஷவின் அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான தீர்ப்பு குறித்து பிரதமர் தெரிவித்துள்ள கருத்துக்கள் நீதிமன்றத்திற்கு தேவையற்ற தலையீடு செய்வதாக இருப்பதாகவும் இதனால் நீதிமன்ற சுதந்திரத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை சவால் விட முடியாது எனவும் குறிப்பிட்ட அவர் பிரதமரின் கருத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறது. ஆனால் எந்த தீர்ப்பையும் விமர்சிக்க சகலருக்கும் உரிமையிருக்கிறது. தீர்ப்பிலுள்ள குறை பாடுகளை சுட்டிக்காட்ட முடியும். நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க முடியாது என பரவலாக பேசப்படுகிறது. ஆனால் சாதாரண பிரஜைகளுக்கும் இது குறித்து கருத்து கூற முடியும்.

அரசியலமைப்பின் 132 ஆவது சரத்தின் பிரகாரம் மூன்று பேருக்குக் குறையாத உச்ச நீதிமன்ற நீதியரசர்களே வழக்கை விசாரிக்க வேண்டும். அந்த குறை பாட்டையே பிரதமர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் நாம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.

மக்களின் நீதித்துறை அதிகாரம் பாராளுமன்றத்தினூடாக நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தினால் ஏதும் குறைபாடு இடம்பெற்றால் அது குறிதது பேச எமக்கு உரிமை கிடையாதா? நாம் மக்கள் சார்பிலே கேள்வி எழுப்புகிறோம் என்றார். விமல் வீரவன்ச எம்.பி. கூறியதாவது; பிரதம நீதியரசரை காதைப் பிடித்து வெளியில் துரத்திய அரசாங்கத்துடன் நீதிமன்ற சுதந்திரம் குறித்து பேச முடியாது என்றார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி இந்த விடயம் குறித்து விவாதம் நடத்த முடியாது. பிரதமர் இன்று (20) சபையில் பதில் அளிப்பார் என்றார்.