செய்திகள்

பிரதமர் பதவியில் நீடிக்க ரணிலுக்கு எந்த உரிமையும் இல்லை: நிமால்

ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியில் நீடிக்க எந்தவொரு உரிமையும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா அறிக்கை ஒன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தமக்கு வழங்கப்படாத மக்கள் ஆணையை அரவணைத்துக்கொண்டு அரசியலில் பல்வேறு கதைகளைப் பேசுவது வேதனைக்குரிய விடயமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய மற்றும் எதிர்க்கட்சியின் செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை பிரதமரினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முடக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரியளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பில் ஊடகங்களின் ஊடாக, பல்வேறு விம்பங்களை தோற்றுவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினால், அவ்வாறான ஊழலுடன் தொடர்புடைய ஒருவரையேனும், நீதிமன்றத்தின் முன்னிலையில் குற்றவாளியாக நிரூபிக்க முடியாதுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், விசேட நிதிமோசடி விசாரணைப் பிரிவை முறையற்ற விதத்தில் செயற்படுத்தி, சிவில் வழக்குகளையும், குற்றவியல் வழக்குகளாக மாற்றி, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக நபர்களை விளக்கமறியலில் வைப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனையோர் மீது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களை சுமத்தாமல், தாம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் மக்களின் அபிப்பிராயங்கள், தீர்மானங்கள் என்னவென்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்பதே சிறந்தது என எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு மக்கள் உரிய பதிலை வழங்குவார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.