செய்திகள்

பிரதமர் – முதலமைச்சர் முறுகல் நிலையால் கட்சிக்குள்ளும் குழப்பம்: சிவசக்தி ஆனந்தன்

பிரதமருக்கும் வடக்கு முதலமைச்சருக்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுகின்றது. முதலமைச்சரை புறக்கணித்து பிரதமர் நிகழ்வுகளை நடத்துவது கட்சிக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, பூவரசன்குளம் மகாவித்தியாலய தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்புவிழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் தெரிவித்ததாவது:

“தமிழ் மக்கள் எல்லோரும் இணைந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த மாற்றம் நிரந்தரமான ஒரு மாற்றமாக இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைத் தரவேண்டும். வடக்குக்கு விஜயம் செய்கின்ற பிரதமர், அமைச்சர்கள், ஜனாதிபதி ஆகியோர் இந்த மாற்றத்தை ஏற்படுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து செயற்பட வேண்டும்.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் எல்லோரும் மாற்றத்திற்காக வேலை செய்திருக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு ஒரு கவலை என்னவென்றால் வடக்கிற்கு விஜயம் செய்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கின் முதலமைச்சருக்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுகிறது.

தேசிய அரசாங்கம் என்ற வகையில் இதற்கு விரைவாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். நாம் இணைந்து செயலாற்றியே அபிவிருத்தி உள்ளிட்ட பல வேலைகளை செய்ய வேண்டியுள்ளது. அண்மையில் வடக்கிற்கு வந்த பிரதமர் முதலமைச்சருக்கு முறையான அழைப்புக்களை வழங்கவில்லை. இதேபோன்று முல்லைத்தீவுக்கும் பிரதமர் வருகை தரவுள்ளார். அங்கு நாம் தர்மசங்கடத்திற்குள்ளான நிலையில் தான் அங்கு செல்லப் போகின்றோம்.

வடக்கின் முதலமைச்சர், அதிகபடியான தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். அவரை புறக்கணித்து வடக்கில் நடவடிக்கைகளையும் முக்கிய நிகழ்வுகளையும் மேற்கொள்வது கவலை தருகிறது. இது கட்சிக்குள்ளும் குழப்தை ஏற்படுத்துகிறது. எனவே இதனை நாம் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்” எனவும் தெரிவித்தார்