செய்திகள்

பிரதமர் வேட்பாளர் யார்? கடும் நெருக்கடிக்குள் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக யாரை களமிறக்குவது என்பதில் கட்சிக்குள் கடும் போட்டி உருவாகியுள்ளது. அதேவேளையில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ களம் இறங்குவதைத் தடுப்பதற்காகவே சுதந்திரக்கட்சியின் தேர்தல் பிரசாரங்களுக்குத் தலைமை தாங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வந்திருப்பதாகவும், கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டதையடுத்து ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி பெரும் அரசியல் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால தெரிவாகியுள்ள போதிலும், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக மகிந்த ராஜபக்ஷவை களமிறக்கும் முயற்சியில் அவரது ஆதரவாளர்கள் இறங்கியுள்ளார்கள். கட்சிக்குத் தலைமை தாங்க வசீகரம் மிக்க ஒருவர் வேண்டும் என்பதாலேயே இதற்கான முயற்சியை இவர்கள் மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த முயற்சியை தாம் கைவிட வேண்டுமானால், மைத்திரிபால சிறிசேன கட்சியின் தேர்தல் பரப்புரைகளுக்கு தலைமைதாங்க முன்வரவேண்டும் என இவர்கள் கொடுத்த அழுத்தத்தையடுத்தே பொதுத் தேர்தலில் நடுநிலை வகிப்பது என்ற நிலைப்பாட்டை மைத்திரிபால மாற்றிக் கொண்டார். சுதந்திரக் கட்சியின் பரப்புரைகளுக்குத் தலைமைதாங்குவதற்கும் அவர் இணங்கியிருக்கின்றார்.

அதிருப்தியுடன் லண்டன் சென்ற சந்திரிகா

அதேவேளையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை கட்சியின் தலைவராகக் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. கட்சியின் போதஷகர்களில் ஒருவராக அவர் நியமிக்கப்பட்டார். மகிந்த ராஜபக்ஷவும் அதேபோன்ற பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
1
மகிந்தவுக்கு சமமாக தன்னையும் நியமித்தது சந்திரிகாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. சந்திரிகாவுக்காக கட்சியின் தலைமைப் பதவியை விட்டுக்கொடுக்க மைத்திரி தயாராக இருந்த போதிலும், கட்சியின் யாப்பு அதற்கு இடம்கொடுக்கவில்லை. ஜனாதிபதிப் பதவியில் இருப்பவர் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால் அவரே கட்சித் தலைமையை ஏற்க வேண்டும் என்பதுதான் கட்சியின் யாப்பு. இதனால், கட்சியின் தலைமைப் பதவிக்கு சந்திரிகாவைக் கொண்டுவர முடியவில்லை. இந்தப் பின்னணியிலேயே சந்திரிகா லண்டன் திரும்பினார்.

இந்த நிலைமைகளைப் பயன்படுத்திக் கொண்டு மகிந்தவை சுதந்திரக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக களம் இறக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளைத் தடுக்கவே சுதந்திரக் கட்சியின் பரப்புரைகளுக்கு தலைமை தாங்க மைத்திரி இணங்கியுள்ளார்.

மைத்திரியின் முடிவுக்கு 3 காரணங்கள்

மைத்திரிபாலவின் இந்த நிலைப்பாட்டுக்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஒன்று: மகிந்தவின் மீள்வருகை மைத்திரிக்கும் சந்திரிகாவுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது அவர்கள் பழிவாங்கப்படலாம்.

இரண்டு: மகிந்த  மீள்வருகையுடன் தனது குடும்பத்தையும் ஆதரவாளர்களையும் அவர் உள்ளே கொண்டு வருவார் என்பதனால் கட்சியின்  தலைமைப் பதவியில் கண் வைத்துள்ளவர்கள் அதனை விரும்பவில்லை.

மூன்றாவதாக: மகிந்தவைக் கொண்டுவருவது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து சிறுபான்மையினரை விலகிச் செல்லச் செய்துவிடும்.

இந்த மூன்று காரணங்களையும், கவனத்திற்கொண்டே சுதந்திரக் கட்சியின் மேடைகளில் மைத்திரிபால ஏறவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சந்திரிகாவின் மகன் விமுத்தி குமாரதுங்கவை கம்பஹாவில் கட்சியின் தலைமை வேட்பாளராக களமிறக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வேட்பாளர் யார்?

இதேவேளையில், கட்சியின் பிரதமர் வேட்பாளராக நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, தயாசிறி ஜெயசேகரா ஆகியோரில் ஒருவரை களம் இறக்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. மகிந்தவை ஒதுக்கி வைத்து சிறுபான்மையினக் கட்சிகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் கொண்டுவரும் நோக்கத்துடனேயே இது தொடர்பில் ஆராயப்பட்டது.
000
சிறுபான்மையினக் கட்சிகள் சிலவற்றுடனும் இது தொடர்பாக பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், பிரதமர் வேட்பாளர் என யாரையும் அறிவிக்காமல் தேர்தலைச் சந்திப்பது எனவும் தேர்தலின் முடிவில் பிரதமரை ஜனாதிபதி நியமிக்கலாம் எனவும் தற்போதைய நிலையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருந்தபோதிலும், இ.தொ.கா., மலைய மக்கள் முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், னைநாயக மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தி அவற்றின் ஆதரவை பொதுத் தேர்தலின் போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் பலர் அக்கறை காட்டிச் செயற்பட்டுவருவதாகவும் தெரியவந்திருக்கின்றது.