செய்திகள்

பிரதம நீதியரசராக ஶ்ரீபவன் நியமனம்: கருணாநிதி பாராட்டு

இலங்கை பிரதம நீதியரசராக ஸ்ரீபவனை நியமனம் செய்தது பாராட்டுக்குரியது என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில்,

‘இலங்கையில் பொறுப்பேற்றிருக்கும் மைத்திரிபால சிறீசேனாபுதிய அரசு, சிறுபான்மைத் தமிழினத்தைச் சேர்ந்த 62 வயதான கே.ஸ்ரீபவனை நாட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்திருப்பது வரவேற்றுப் பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கையாகும்.

1991ஆம் ஆண்டில் இலங்கையின் தலைமை நீதிபதியாக தம்பையா என்னும் தமிழர் இருந்திருக்கிறார். தற்போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு தமிழர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பது, தமிழினத்திற்கு இதுவரை இழைக்கப்பட்டிருக்கும் ஏராளமான அநீதிகளை ஒவ்வொன்றாகத் துடைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் ஒன்றாகவே உலகத் தமிழினத்தால் கருதப்படும்.

எனினும், இலங்கையில் புதிய அரசின் பல அறிவிப்புகள் நடைமுறைக்கு வருவதில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.