செய்திகள்

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி விலக வேண்டும்: சட்டத்தரணிகள் சங்கம் போர்க்கொடி

இலங்கையின் தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவிவிலக வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து பதவி விலக முன்னர் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள மகிந்த ராஜபக்‌ஷ மேற்கொண்ட சதித் திட்டத்தில் மொஹான் பீரிஸ் தொடர்புபட்டிருந்தாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் பதவிநீக்கப்பட்ட 43வது தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக கொழும்பில் மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் உப்புல் ஜயசூரிய தெரிவித்தார்.

ஷிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது. சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு மட்டுமன்றி, இதுதொடர்பில் கூட்டப்பட்ட சிறப்பு பொதுச் சபையும் ஷிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் தலைமை நீதியரசர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்றே கோரியுள்ளதாகவும் வழக்கறிஞர் உப்புல் ஜயசூரிய கூறியுள்ளார்.

தற்போதைய தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் உடனடியாக பதவிவிலக வேண்டும் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் சட்டத்தரணிகள் ஒன்றியமும் ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளதாக சட்டத்தரணிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கே.எஸ். ரட்ணவேல் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக மகிந்த ராஜபக்ஷ இராணுவத்தைக் கொண்டு தொடர்ந்தும் ஆட்சியிலிருக்க திட்டம் தீட்டியதாகவும் அந்த சதித்திட்டத்தில் தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸுக்கும் பங்கு உண்டு என்றும் சட்டத்தரணி ரட்ணவேல் தெரிவித்தார்.

‘மக்களின் தீர்ப்புக்கு எதிராக பலவிதமான சதித்திட்டங்கள் போடுவதற்கு எத்தனிக்கப்பட்டிருந்த அந்த நேரத்தில் நாட்டின் நீதியின் காவலனாக இருக்க வேண்டியவர் அங்கு பிரசன்னமாகி இருந்தார்’ என்றார் ரட்ணவேல்.