செய்திகள்

பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைத்தது பிரதமரின் திட்டம்: மனோ குற்றச்சாட்டு

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைத்தது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் திட்டமே என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

125 தொகுதிகள், 75 மாவட்ட விகிதாசாரம், 25 தேசிய விகிதாசாரம் என்ற அடிப்படையில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் எனும் நிலையை தமிழ் முற்போக்கு முற்றாக நிராகரிப்பதாகக் குறிப்பிட்ட மனோ கணேசன், திங்கட்கிழமை மாலை வரை கூறப்பட்ட கணக்கு வேறாக அமைந்திருந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்திற்கு 4 தனி தொகுதிகள் தேவை என்றும் கொழும்பு, பதுளை, கண்டி, இரத்தினபுரி, கம்பஹா மாவட்டங்களில் வாழக்கூடிய தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்குத் தேவையான பல்அங்கத்தவர் தேர்தல் தொகுதி தேவை என்றும் தாம் கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நண்பகலில் 255 பிரதிநிதிகள் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டிருந்தபோதும் மாலை வேளையில் 225 ஆகக் குறைக்கப்பட்டமை பிரதமரின் யோசனை எனவும் அதுபற்றிய ஆட்சேபனையைத் தாம் ஏற்கனவே தெரிவித்திருப்பதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.