செய்திகள்

பிரபல படத் தயாரிப்பாளர் டி ராமாநாயுடு மரணம்

பிரபல தமிழ், தெலுங்குப் படத் தயாரிப்பாளரும் நடிகர் வெங்கடேஷின் தந்தையுமான டி ராமாநாயுடு இன்று ஹைதராபாதில் மரணமடைந்தார். அவருக்கு வயது 78. அவர் உடல் நலக் குறைவால் நீண்ட காலம் கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்தார். ஆந்திராவின் கரம்சேடுவில் பிறந்த டக்குபதி ராமாநாயுடு எனும் டி ராமாநாயுடு தெலுங்கு சினிமாவின் மிகவும் செல்வாக்கு மிக்க தயாரிப்பாளராகத் திகழ்ந்தார்.
திரைப்படத் துறைக்கு வரும் முன் மிகவும் சாதாரண கூலித் தொழிலாளியாக பல வேலைகள் பார்த்தவர் ராமாநாயுடு. சினிமா மீதான ஈடுபாடு காரணமாக ஒரு திரைப்பட ஏஜென்சி மூலம் இந்தத் தொழிலுக்கு வந்தார். மறைந்த அக்கினேனி நாகேஸ்வரராவின் படப்பிடிப்புகளுக்கு வசதிகள் செய்து தரும் நிர்வாகியாக சில காலம் இருந்தார். அப்போதுதான் திரைப்பிரபலங்கள் பலரும் அறிமுகமாகினர்.

இதனைத் தொடர்ந்து சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை அவர் ஆரம்பித்தார். 1964-ல் ராமுடு பீமுடு எனும் படத்தை முதலில் தயாரித்தார். பாக்ஸ் ஆபீசில் மிகப் பெரிய வெற்றிைப் பெற்ற படம் இது. தொடர்ந்து பல படங்களைத் தயாரித்தார். தமிழில் வசந்த மாளிகை, ரஜினியின் தனிக்காட்டு ராஜா போன்ற பெரும் வெற்றிப் படங்களை தனது சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஒரியா, பஞ்சாபி, ஆங்கிலம் என பல மொழிகளில் படம் தயாரித்த தென்னக தயாரிப்பாளர் இவர்தான். 13 மொழிகளில் 150 படங்களுக்கு மேல் இவர் தயாரித்துள்ளார். இந்த பெரும் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இவரது திரையுலக பங்களிப்புக்காக இந்திய அரசு 2009-ம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதினை அறிவித்தது. பின்னர் 2012-ம் ஆண்டு பத்மபூஷன் விருதினையும் அளித்து கவுரவப்படுத்தியது.