செய்திகள்

பிராந்திய அரசியலிலும் தமிழ் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்: ஈ.பி..டி.பி.

தமிழர் பிரச்சினையைத் தீர்க்க புதிய அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியிருப்பதாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கூறியிருப்பது தமது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மூடிமறைக்கும் தந்திரோபாயப் பொய்களே அன்றி வேறொன்றும் அல்ல. மக்களுக்கு பொய் கூறும் இவ்வாறான செயற்பாடுகளையே ஈ.பி.டி.பி கண்டிக்கின்றதுஅவ்வமைப்பின் ஊடகச் செயலாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஏற்கெனவே 2014 செப்டெம்பர் மாதம் வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் 15ஆவது மகாநாட்டில் உரையாற்றிய மாவை சேனாதிராசா, தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் 2015ஆம் ஆண்டு தைத்திங்கள் முதலாம் நாள் அகிம்சைப்போர் வெடிக்கும் என்று கூறியிருந்தார். ஆனால் தைத்திங்களில் அவர் கூறிய அகிம்சைப்போர் வெடிக்கவில்லை. அவ்வாறானதொரு அகிம்சைப்போரை உறுதியோடு முன்னெடுக்கக்கூடிய ஆளுமை கூட்டமைப்புக்கோ, தமிழரசுக்கட்சிக்கோ இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறியிருந்தனர்.

இப்போது ஒரு அறப்போரைப் பற்றி அவரே மீண்டும் கூறியிருக்கின்றார். அது எப்போது ஆரம்பிக்கப்படும் என்பதைப் பற்றியும்; புத்திசாதூரியமாக தெரிவிக்காமலும். மழுப்பியிருக்கின்றார்.

நாம் ஏற்கெனவே கூறியதுபோல் அடுத்து நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களிடம் கூறுவதற்கு புதிய சாக்குப் போக்குகளை தேடிய கூட்டமைப்பினருக்கு எதுவும் கிடைக்கவில்லை.
இறுதியில் தற்போதைய அரசாங்கத்தை ஆதரித்து தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கூறியவர்கள் தற்போது அதே அரசாங்கத்தையே எதிர்த்து தமது சுயஇலாப அரசியலை முன்னெடுக்க ஆயத்தமாகியுள்ளனர்.

தற்போதைய அரசோடும் கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன் வைத்து தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாதுபோனால், தீர்வுக்கான விருப்பம் கூட்டமைப்பினரிடம் இல்லை என்ற உண்மை விரைவில் அம்பலமாகும். பாராளுமன்றத் தேர்தலுக்கு கூட்டமைப்பு தயாராகிவிட்டது. ஜனாதிபதித் தேர்தலின் போது புதிய அரசோடு காணப்பட்ட இணக்கங்களும், கொடுக்கல் வாங்கல்களுமான தேனிலவு முடிவுக்கு வரத் தொடங்கியுள்ளது.

தென் இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வட இலங்கையிலும் கூட்டமைப்பு தமிழ் மக்களிடையே நடத்திவரும் ஏகபோக சுயலாப அரசியலும் மாற்றமடைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். அந்த மாற்றத்தை ஏற்படுத்த உறுதியெடுப்பதே தமிழ் மக்கள் முழுமையான மாற்றத்தை அனுபவிக்க வழிபிறக்கும் என்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துக் கொள்கின்றது.