பிரான்சின் பணயக்கைதி நாடகங்கள் கடும்சண்டையுடன் முடிவுக்கு வந்தது
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சார்லி ஹெப்டோ சஞ்சிகை மீது தாக்குதல் நடத்தி 12 பேரை கொன்ற இரு அல் கைதா பயங்கரவாதிகளும் அவர்களின் மற்றொரு சகாவும் இணைந்து இன்று பிரான்சில் மேற்கொண்ட இரு வெவ்வேறு பணயக்கைதி நாடகங்கள் கடும் சண்டையின் பின்னர் முடிவுக்கு வந்திருக்கிறது.
இதன்போது , 4 பணயக் கைதிகள் பலியானதுடன் மூன்று தீவிரவாதிகளும் பிரான்சிய பொலிசாரினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சார்லி ஹெப்டோ சஞ்சிகை மீது தாக்குதல் நடத்திய இரு அல் கைதா சகோதரர்களும் வியாழக்கிழமையன்று பிரான்சின் வடகிழக்கு பகுதியில் உள்ள அச்சக வர்த்தக நிலையம் ஒன்றினுள் புகுந்து அங்கிருந்தவர்களை பணயக்கைதிகளாக வைத்திருந்த நிலையில் அவர்களை பிரான்ஸ் பொலிசார் சுற்றிவளைத்திருந்தனர். இந்தநிலையில் , இன்று மாலை அவர்கள் பதுங்கியிருந்த கட்டடம் மீது பொலிசார் அதிரடி தாக்குதல் நடத்தியதில் இரு சகோதரர்களும் கொல்லப்பட்டனர். இதன்போது பணயக் கைதிகள் எவரும் உயிரிழக்கவில்லை. எனினும் பாரிஸில் யூத இனத்தவருக்கு சொந்தமான அங்காடி ஒன்றினுள் பணயக் கைதிகளை பிடித்து வைத்திருந்த அல் கைதா பயங்கரவாதி மீது பொலிசார் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதுடன் மூன்று பணயக்கைதிகளும் உயிரிழந்தனர்.
சார்லி ஹெப்டோ சஞ்சிகை மீது தாக்குதல் நடத்திய இரு சகோதரர்களில் ஒருவர் இறப்பதற்கு முன்னர் தொலைக்காட்சி ஒன்றுடன் தொலைபேசியூடாக கதைத்தபோது தமக்கு யேமன் நாட்டிலுள்ள அல் கைதா தலைவர் ஒருவரான அன்வர் அல் அவ்லாகி என்பவரே நிதி அளித்ததாக கூறினார். இதேவளை, யேமன் நாட்டில் இருந்து செயற்படும் அல் கைதா தலைவர்களில் ஒருவர் யு டியூப்பினூடாக வெளியிட்டுள்ள ஒரு உரையில் பிரான்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அங்கு அல்லா கேலி செய்யப்பட்டதனால் மேற்கொள்ளப் பட்டதென தெரிவித்தபோதிலும் , சார்லி ஹெப்டோ சஞ்சிகை மீதான தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை. ஆனால் , சஞ்சிகை மீது தாக்குதல் நடத்திய இரு சகோதரர்களும் அல்லாவின் விசுவாசமான வீரர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தின் வரையறைகள் என்ன என்பதை பிரான்சுக்கு கற்றுக் கொடுத்திருப்பதாகவும் கூறினார்.
இதேசமயம், பாரிஸில் யூத இனத்தவரின் அங்காடியில் பணயக்கைதி நாடகம் நடத்திய நபரும் இறப்பதற்கு முன்னர் அதே தொலைக்காட்சியுடன் தொடர்புகொண்டு தான் பாலஸ்தீனியர்களை பாதுகாக்கவும் யூதர்களை இலக்குவைக்கவும் விரும்பியதாக கூறினார்.அத்துடன், சஞ்சிகை மீது தாக்குதல் நடத்திய சகோதரர்களுடன் ஒன்றிணைந்தே இந்த தாக்குதல்களை நடத்தியதாகவும் தெரிவித்தார்.