செய்திகள்

பிரான்சில் 2 தேவாலயங்களை தாக்க அல்கொய்தா தீவிரவாதி சதி: ஆயுதங்களுடன் இளைஞர் கைது

பிரான்ஸ் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் ஜார்லிஹெப்டோ என்ற கார்ட்டூன் பத்திரிக்கை மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். மேலும் பாரீஸ் சூப்பர் மார்க்கெட்டிலும் தாக்குதல் நடந்தது. இதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அல்கொய்தா தீவிரவாதி ஒருவன் 2 தேவாலயங்களில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருந்ததை பிரான்ஸ் போலீசார் முறியடித்துள்ளனர்.

அந்த தீவிரவாதியின் பெயர் சயித்அகமதுஹாம் (வயது 24). இவன் அல்ஜீரியா நாட்டை சேர்ந்தவன். தகவல் தொழில்நுட்பத்தில் என்ஜினீயரிங் படித்த அவன் பிரான்சில் வேலை பார்த்து வந்தான்.

அவன் தனது துப்பாக்கியை எடுத்த போது அது தவறுதலாக வெடித்து அவனுக்கு காயம் ஏற்பட்டது. உடனே ஆம்புலன்சுக்கு போன் செய்து அழைத்தான். இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.

அவனது வீட்டையும், காரையும் சோதனையிட்டனர். காருக்குள் பலவித துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்களை வைத்திருந்தான். மேலும் 2 தேவாலயங்கள் பற்றிய குறிப்புகள் அவனிடம் இருந்தன.

இதுபற்றி விசாரித்த போது, 2 தேவாலயங்களில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாக கூறினான். அவன் அல்கொய்தா இயக்கத்தின் உறுப்பினராக இருப்பதும் தெரியவந்தது. அதையடுத்து அவனை கைது செய்தனர். இவனது பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா? என்று விசாரித்து வருகிறார்கள்.