செய்திகள்

பிரான்ஸ் தாக்குதல்களால் தூண்டப்பட்டே டென்மார்க் துப்பாக்கிபிரயோகம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிப்பு

டென்மார்க் தலைநகர் ஹோப்பன்ஹேகனில் சனிக்கிழமை தாக்குதல்களை மேற்கொண்டநபரை சுட்டுக்கொன்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார்,கடந்த மாதம் பிரான்சில் சார்லிஹெப்டொவின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் உந்தப்பட்டே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இந்ததாக்குதலை மேற்கொண்ட நபரை புலனாய்வு பிரிவினரிற்கு முன்னரே தெரிந்திருந்ததாகவும், அவர் தனித்தே செயற்பட்டதாகவும் டென்மார்க் புலனாய்வு பிரிவின் தலைவர் ஜென்ஸ் மட்சன் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு என்ன காரணம் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாது,எனினும் பாரிசில் இடம்பெற்ற தாக்குதல்களால் இவர் உந்தப்பட்டிருக்கலாம் அவர் குறிப்பிட்டுள்ளார். சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னர் அவரது படத்தை வெளியிட்டிருந்த பொலிஸார்,அவர் மத்திய கிழக்கில் ஆயுத பயிற்சிபெற்றதாக கருதவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
சுவீடனின் கேலிச்சித்திர நிபுணர் லார்வில்க்ஸ் கலந்து கொண்ட நிகழ்வின்போது குறிப்பிட்ட நபர் 40 தடவைகளுக்கு மேல் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும்,வில்க்ஸ் உயிர்தப்பிய போதிலும், ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும்,இதன் பின்னர் யூத வழிபாட்டுத்தலமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அதன் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் சம்பவங்களை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்ட ஆயுததாரி பொலிஸார் மீது தாக்குதலை மேற்கொண்டவேளை அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.