செய்திகள்

பிரிட்டனில் புகலிடக் கோரிக்கையாளர்களை கையாளும் ‘துரித நடைமுறையை’ உடன் நிறுத்த மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

பிரிட்டனில் புகலிட விண்ணப்பம் கோரி அது நிராகரிக்கப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு, அவர்களின் நீதிமன்ற முறையீட்டை ‘துரித முறையில்’ கையாளும் முறைமை (Fast-track asylum appeal system ) கட்டமைப்பு ரீதியாக நேர்மை அற்றது என்றும் அதனை உடன் நிறுத்துமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பிரித்தானிய அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக பிரிட்டனில் நடைமுறையில் இருக்கும் இந்த முறைமையின் கீழ் புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்படும் அதேவளை, முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்கு 7 நாட்கள் கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக, மிகவும் துரிதமான முறையில் புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களை பிரித்தானிய அரசாங்கம் அவர்களது சொந்த நாடுகளுக்கு துரிதமாக அனுப்ப முடிந்துள்ளது.

இந்த முறைமை அநீதியானது என்று மனித உரிமை அமைப்புக்கள் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இரண்டு வாரங்களுக்கு முன்னர் உயர் நீதிமன்றத்துக்கு வந்தபோது , இந்த முறைமை சட்டவிரோதமானது என்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பாதகமானது என்றும் இந்த முறைமை இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்த போதிலும், அரசாங்கம் இதற்கெதிராக மனுத் தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வழங்கியிருந்தது. அதுவரை , இந்த முறைமை அமுல்படுத்தப்படலாம் என்றும் கூறியிருந்தது.

இருந்தபோதிலும், மனித உரிமை அமைப்புக்கள் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கெதிராக, முறையீடு செய்து , உடனடியாகவே இந்த முறைமை இடைநிறுத்தப்பட வேண்டும் என்று கேட்டிருந்தனர். இந்த முறையீட்டை இன்று வெள்ளிக்கிழமை பரிசீலித்த மேன் முறையீட்டு நீதிமன்றம், உடனடியாக இந்த முறைமையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பிரித்தானிய அரசாங்கத்துக்கு ஒரு பெரும் பின்னடைவு என்ற போதிலும், புகலிட கோரிக்கைகளை கையாளும் உள்துறை அலுவலகம், தொடர்ந்தும் ஒருவர் புகலிட விண்ணப்பம் செய்யும்போது அவரை தடுப்பில் வைத்து அவரது விண்ணப்பத்தை பரிசீலிக்க முடியும். ஆனாலும் , அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்காக அவரை பிணையில் விடுதலை செய்யவேண்டி வரும். இதன் காரணமாக, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், தமது முயையீட்டு மனுவை தாக்கல் செய்வதற்கு போதிய கால அவகாசத்தை பெற முடியும் என்பதுடன் சுதந்திரமாக தனது மனுவை தயார் செய்ய முடிவதுடன் சட்ட ஆலோசனையையும் பெற முடியும்.

HighCourt_2336678b