செய்திகள்

பிரித்தானிய தேர்தல்: கன்சர்வேட்டிவ் தனிக்கட்சியாக ஆட்சி அமைக்கும் நிலை

பிரித்தானியாவில் நேற்று நடைபெற்ற பாரளுமன்றத்துக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி இதுவரை 310 ஆசனங்களை பெற்று தனிக்கட்சியாக ஆட்சி அமைக்கும் நிலையை எட்டி வருகிறது. இன்னமும் ஆட்சி 25 ஆசனகளுக்கான முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில், அக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு இன்னமும் 13 ஆசனகளே தேவைப்படுகிறது. கணிப்புக்களின் படி, கன்சர்வேட்டிவ் கட்சி மொத்தம் 329 ஆசனங்களை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள, தற்போதைய பிரதமரும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவருமான டேவிட் கமரூன்,அனைவருக்குமாக தான் நாட்டை ஆளவிருப்பதாக தெரிவித்ததுடன், முன்னர் கூறியிருந்தபடி நாட்டுக்கு கூடுதலான அதிகார பகிர்வை வழங்கவிருப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கடும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட தொழில் கட்சி இதுவரை 228 ஆசனங்களை மட்டுமே இதுவரை பெற்றுள்ளது. மொத்தமாக, 233 ஆசனங்களையே அக் கட்சி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 59 ஆசனங்களில் 56 ஆசனங்களை பெற்று ஸ்காட்லாந்தில் பெரும் வெற்றி பெற்றுள்ள ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் ஆதரவை பெற்றால் கூட தொழில் கட்சியினால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவளை, லிபரல் டெமோகிரட்ஸ் 8 ஆசனங்களையும் (1%), பிரித்தானிய சுதந்திர கட்சி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.