செய்திகள்

பிரிவினைவாதத்தை புறந்தள்ளிவிட்டு ஒன்றிணைந்து நாட்டை கட்டியயழுப்புவோம்

நாட்டில் நிலவிய கொடிய யுத்தம் மற்றும் இனவாத செயற்பாடுகள் காரணமாக எம்மை விட்டு ஏனைய ஆசிய நாடுகள் அனைத்தும் முன்னேறிச் சென்றுவிட்டன. அதனால்தான் தேசிய அரசாங்கத்தை உருவாக்க இரு பிரதான கட்சிகளையும் ஒன்றிணைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் உங்களுக்குச் சிறந்த நாடொன்றை உருவாக்கித் தருவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை சீகிரிய “யொவுன்புர’ இளைஞர் ஒன்றுகூடல் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இளைஞர்களே எமது நாட்டின் சிறந்த எதிர்காலமாகும். 30 வருட கால யுத்தத்தின் பின்னர் சிறந்த எதிர்காலத்தை இளைஞர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பிரதமர் இங்கு உரையாற்றுகையில்;
சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்த்து நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 5,000 இளைஞர், யுவதிகள் இங்கு சமுகமளித்துள்ளனர். நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார செயற்பாடுகளில் பங்குதாரர்களாக இவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
எதிர்வரும் 5 ஆண்டுகளின் பின்னர் இதன் பிரதிபலனை அனுபவிப்பவர்கள், நானோ, ஜனாதிபதியோ, முதலமைச்சர்களோ அல்லது ஆளுநர்களோ அல்ல. இளம் சந்ததியினரான நீங்களே அப்பிரதிபலன்களை அடையப் போகின்றீர்கள்.
இன, மத, பிரிவினைவாதம், பயங்கரவாதம் எமக்கு வேண்டாம். இன, மத, பாகுபாடுகளை புறந்தள்ளி ஒருதாய் மக்களாக நாட்டை ஒற்றுமையுடன் கட்டி எழுப்புவோம். பொருளாதாரத்தில் சக்தி வாய்ந்த நாடாக எமது நாட்டை உருவாக்குவோம். அடுத்துவரும் ஒன்றரை வருட காலத்தில் எமது நாடு பொருளாதாரத்துறையில் மிகவும் சக்தி மிகுந்த நாடாக மலரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இளைஞர் பாராளுமன்ற செயற்றிட்டங்களுக்காக இவ்வருடம் 250 கோடி ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளதையும் நான் இங்கு தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
n10