செய்திகள்

பிரிவினைவாதிகளும் வெளிநாட்டுச் சக்திகளுமே தோற்கடித்தனர்: மீண்டும் சொல்கிறார் மகிந்த

கடந்த ஜனாதிபதி தேர்தலில் எம்மை வெளிநாட்டு சக்திகளும் பிரிவினைவாதிகளும் தோற்கடித்த போதிலும் அரசியல் ரீதியாக எம்மை தோற்கடிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மிகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெற்றிப்பெற்ற சுதந்திரம் அபாயத்தில் என்ற தொனிப் பொருளில் இரத்தினபுரி நகரில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை பிரதமராக்கும் பொருட்டு நடைபெற்ற கூட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பிய அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளர் சமர நாயக்காவினால் விடுக்கப்பட்ட அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“நுகேகொடையிலும், கண்டியிலும் நடைபெற்ற இவ்வாறான கூட்டத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன். 3 ஆவது முறையும் வாழ்த்து தெரிவிக்க சந்தர்ப்பம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடை கின்றேன். அது மட்டுமல் லாமல் எமது தாய்நாட்டை காப்பாற்றும் பொருட்டு 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 10 வருட காலம் என்னுடன் இருந்த மக்கள் இன்றுவரை என்னைவிட்டு பிரியாமல் இருப்பது குறித்து சந்தோசமடை கின்றேன். இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தாய்நாட்டை நேசிக்கும் நீங்கள் என்னுடன் இருந்திருக்காவிட் டால் எமது நாட்டை காப்பாற்ற முடியாமல் போயிருக்கும் பிரிவினைவாதிகள் தலைதூக்கியிருப்பர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாட்டினரின் சதி முயற்சி காரணமாக தோல்வியடைந்தோம் ஆனால் உங்கள் மனதிலிருந்து இன்று வரை தோற்கவில்லை. அதனால் தான் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் வெற்றிப்பெற முடிந்தது. வெற்றிலை சின்னத்திற்கு வாக்களித்து தேசிய கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஐக்கிய தேசிய கட்சி உடனான கூட்டாட்சி யானது மக்கள் விரோத ஆட்சியாம். அதனை கவிழ்த்து மக்களுக்கு சிறந்த ஆட்சியை வழங்கு வதே எமது குறிக்கோளா கும். இதற்கு ஸ்ரீல. சு. கட்சியுடனான ஐ. ம. சு. கூட்டமைப்பு முழு ஆதரவு வழங்கும் என நம்புகிறேன்.

அரசியல் ரீதியாக எம்மை யாராலும் தோற்கடிக்க முடியாது என்பதனை எதிரிகளுக்கும் வெளிநாட்டினருக்கு அறிவிக்க விரும்புகின்றேன். எதனை இல்லாதொழித்தாலும் எமது ஆத்ம கெளரவத்தை இல்லாதொழிக்க முடியாது. இதனை நாம் எதிரிகளுக்கு புரிய வைக்கவேண்டும். பிரிவினைவாதிகள் எமது கொள்கைகளை இல்லாதொழிக்க முயற்சிக்கின்றனர். உலகத்திலேயே அபிவிருத்தியில் வெற்றிப்பெற்ற நாடாக இலங்கையை அபிவிருத்தி செய்யும் எமது திட்டத்தை ஐ. தே. கட்சி இல்லாதொழித்து வருகின்றது. அதற்கெதிராக இரத்தினபுரியிலிருந்து குரலெழுப்ப வேண்டும்.

ஜே. ஆர். ஜயவர்தன, ஆர். பிரேமதாச போன்றவர்களின் ஆட்சியில் இடம்பெற்ற கொடூரமான முறைக்கு எதிராக கொழும்பிலிருந்து கதிர்காமத்துக்கு பாதயாத்திரையாக சென்றவர்களையும் எம்பிலிபிட்டிய மாணவர் கொலைக்கெதிராக இரத்தக்கறையுடன் பாதயாத்திரை சென்றவர்களையும் நினைவு கூருகின்றேன், இதற்கு வாசுதேவ போன்றவர்கள் மிக்க பலமாக இருந்தனர் என்பதனை மறக்க முடியாது. ஸ்ரீல. சு. கட்சியை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டின் முடிவில்லாத அவிருத்தியை நோக்கி செல்வோமாக.”