செய்திகள்

பிலிப்பைன்ஸில் புயல் தாக்கி 2 பேர் பலி! 3 ஆயிரம் பேர் வெளியேற்றம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல் தாக்கியதில் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் புயலின் தாக்கம் நீடிப்பதால் 3,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்சில்,கடந்த 2 நாட்களாக நோயுல் என்ற புயல் அச்சுறுத்தி வந்தது. அந்தப் புயல் நேற்றுக் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.

இதனால் மரங்கள், மின் கம்பங்கள் வேருடன் சாய்ந்தன. வீட்டின் கூரைகள் காற்றில் பறந்தன. பலத்த மழையும் கொட்டியதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கி கடும் சேதம் அடைந்தன.

அபார்ரி நகரில் ஒரு வீட்டில் மின்சாரம் தாக்கி 70 வயது முதியவரும், அவரது 45 வயது மகனும் பலியாகினர். இசபெல்லா, கஹாயன் பகுதிகளில் கடற்கரையோரம் வசித்த 3 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 4 கடும் புயல்கள் தாக்கியுள்ளன. இதனால் அங்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.