செய்திகள்

”பிள்ளைகளுக்கான பாலியல் கல்வி போதுமானதாக இல்லை”

இலங்கையில் பிள்ளைகளுக்கான பாலியல் கல்வி போதுமானதாக இல்லை என மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று ஜகத் குமார் சுமித்ரஆரச்சி முன்வைத்த வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது இலங்கையில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளுக்கமைய நாட்டில் 2287 சிறுவர் தாய்மார்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாலியல் தொடர்பான அறிவு வயதிற்கு இணங்க வழங்கப்படாமையினால் சிறுவர்களின் பாலியல் கல்வி குறைந்த மட்டத்தில் காணப்படுவதாகவும், வயது வித்தியாசத்திற்கு இணங்க படிப்படியாக தமது உடலின் தன்மை தொடர்பாக சிறுவர்களுக்குக் கல்வி வழங்கப்படுவதன் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.

16 வயதிற்கு உட்பட்ட பிள்ளையுடன் பழகுவது தவறு என்பதுடன் சிறுவர்களின் பாதுகாப்பைத் திட்டமிடுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். சிறுமியொருவரை கர்ப்பமடையச் செய்தால், அது குறித்து அரசாங்கம் அவசியமான தலையீட்டை மேற்கொள்ள வேண்டும். பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள கிராம மட்டப் பிள்ளைகள் சட்ட உதவிகளை இலவசமாகப் பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெளிவுபடுத்தினார்.

-(3)