செய்திகள்

பீக்கொக் மாளிகையை மகிந்தவுக்கு வழங்கப்போவதில்லை: பின்வாங்கும் லியனகே

ராஜகிரியவில் அமைந்துள்ள பீக்கொக் மாளிகையை அல்லது தமது கட்சியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கப் போவதில்லை என தொழிலாளர் கட்சியின் தலைவர் ஏ.எஸ்.பி.லியனகே தெரிவிக்கின்றார்.

தாம் எதிர்நோக்கியுள்ள நிலைமையின் கீழ் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு இன்று சமுகமளித்த அவர், ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது இதனைக் கூறினார்.

கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு இன்று பிற்பகல் சமூகமளித்த தொழிலாளர் கட்சியின் தலைவர் ஏ.எஸ்.பி. லியனகே, ராஜகிரியவில் அமைந்துள்ள பீக்கொக் மாளிகை தொடர்பில் கடிதமொன்றை கையளித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

தமக்குச் சொந்தமான குறிப்பிட்ட மாளிகையை விற்கப்போவதாக உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக, அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், லியனகேவுக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்கப்பட்டிருக்கவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிடுகின்றார்.

பீக்கொக் மாளிகையில் வசிப்பதற்கு அல்லது அதனை கொள்வனவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதியிடம் எந்தவொரு எண்ணமும் இருக்கவில்லை என ரொஹான் வெலிவிட்ட மேலும் குறிப்பிட்டுள்ளார்.