செய்திகள்

புகலிடக்கோரிக்கையாளர்களை தற்போதைக்கு இலங்கைக்கு திருப்பியனுப்பவேண்டாம்- இலங்கை மத தலைவர்கள் கோரிக்கை

கார்டியனில் வெளியான செய்திக் கட்டுரை ( தமிழில் சமகளம் செய்தியாளர்)

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் உலகநாடுகள் தற்போதைக்கு புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு திருப்பியனுப்ப கூடாது என இலங்கையின் மதத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

புகலிடக்கோரிக்கையாளர்களை வைத்துள்ள நாடுகளே,தயவுசெய்து அவசரப்பட்டு அவர்களை உடனடியாக திருப்பி அனுப்பவேண்டாம் என்பதே எனது வேண்டுகோள் என கத்தோலிக்க மதகுருவும், சட்டத்தரணியுமான வீரசன் யோகேஸ்வரன் தெரிவித்தார்.சாதகமான மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ளன,அதேவேளை அனைத்தும் சிறப்பாக நடைபெறுகின்றன, அனைத்தும் ஜனநாயக ரீதியில் நடைபெறுகின்றன என்பதற்கான அறிகுறிகள் இல்லை என்றார் அவர்.

கடந்த மாதம் ஆஸியின் குடிவரவு துறையமைச்சர் பீட்டர் டட்டன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.ராஜபக்ச அரசாங்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதலாவது விஜயமிது.
ஆட்கடத்தல்களையும், ஏனைய குற்றச்செயல்களையும் கண்டுபிடிப்பதற்கு இலங்கையும் ஆஸியும் தொடர்ந்தும் இணைந்து செயற்படும் எனவும் டட்டன் தெரிவித்தார்.

aslumஇலங்கையர்கள் படகுகள் மூலமாக ஆஸிக்கு வருவதை தடுப்பதற்காக தொழிற்கட்சியும், கூட்டணி அரசாங்கங்களும் ராஜபக்ச அரசாங்கத்துடன் நல்லுறவை ஏற்படுத்தியிருந்தன.

எனினும் இலங்கை மகிந்த ராஜபக்சவினதும் அவரது குடும்பத்தினரதும் இரும்புப்பிடியில் இருந்த வேளை புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கைக்கு திருப்பியனுப்புவது ஆபத்தான விடயம் என மனித உரிமை ஆர்வலர்களும்,அகதிகளும் தெரிவித்துவந்தனர்.

முன்னைய அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்து தீவிர கவலைகள் வெளிப்படுத்தப்பட்போதிலும்,ஆஸியின் அரசாங்கங்கள் இலங்கையின் புகலிடக்கோரிக்கையாளர்களை மிகுந்த உற்சாகத்துடன் இலங்கைக்கு திருப்பியனுப்பி வந்தன.

ஆகதிகள் துன்புறுத்தப்படும் சூழ்நிலை நிலவும் தருணத்தில் அவர்களை திருப்பியனுப்ப கூடாது என்ற தனது சர்வதேச கடப்பாட்டை அவுஸ்திரேலியா மீறியதற்கான ஆதாரங்கள் உள்ளன. இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்ற பின்னர் ரணில்விக்கிரமசிங்க, படகுகள் மூலம் இலங்கையர்கள் வருவதை தடுப்பதற்காக ராஜபக்ச அரசாங்கத்தின் மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஆஸி அரசாங்கம் மௌனமாக இருந்தது என குற்றம்சாட்டியிருந்தார்.

திருகோணமலையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்ககான, ஊக்குவிப்பதற்கான நிலையத்தை ஏற்படுத்தியுள்ள அருட்தந்தை யோகேஸ்வரன்,இலங்கையில் மனித உரிமை நிலவரம் குறித்து இன்னமும் தீர்வு காணப்பவில்லை அது நிச்சயமற்றதாகவுள்ளது என தெரிவித்தார்.

இலங்கையில் இன்னமும் தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்ற உணர்வே சிறுபான்மையினத்தவர்கள் மத்தியில் காணப்படுகின்றது, இதன் காரணமாகவும் அவர்கள் இங்கிருந்து வெளியேறுகின்றனர்,தற்போது ஆள்கடத்தல்கள் இல்லாமலிருக்கலாம்; ஆனால் தொடர்ச்சியான துன்புறுத்தல்கள் மிரட்டல்கள் உள்ளன என்றார்.

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பும் இதனை ஏற்றுக்கொண்டார், நாட்டின் குற்றதடுப்பு விசாரணை பிரிவினர் பல பகுதிகளில் வரவேற்கப்படாத பிரசன்னத்தை கொண்டுள்ளனர் என்றார் அவர். மக்கள் தற்போதும் அச்சத்தில் வாழ்கின்றனர் என்றார் அவர்.

இதன் காரணமாகவே வடக்கு கிழக்கில் இராணுவத்தினரை அகற்றுமாறு கோரிக்கைகள் எழுகின்றன, என தெரிவித்த யோகேஸ்வரன்,அளவுக்கதிகமான இராணுவமுகாம்களையும், பொதுமக்களின் வாழ்க்கை மீதூன தலையீட்டையும் அகற்றவேண்டும் எனவும் தெரிவித்தார்.

அரசாங்கம் இன்னமும் இந்த விவகாரங்களுக்கு தீர்வை காணவில்லை,அவற்றையும், இராணுவ குடியிருப்புகளையும் அகற்றப்போவதில்லை என அரசாங்கம் தெரிவித்து வருகின்றது,மேலும் அவர்கள் அங்கும், இங்கும் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றனர்,எனவும் சுட்டிக்காட்டிய யோகேஸ்வரன், இவை யாவும் நாங்கள் இன்னமும்,ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில்,அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு மத்தியில் வாழ்வதை புலப்படுத்துகின்றன,அதன் காரணமாக மக்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கின்றனர், அவர்கள் ஏனைய இலங்கையர்கள் போல பாதுகாப்பான வாழ்க்கையை வாழவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்புவதற்கு பதில் இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்கள் எவ்வாறு அமைதியாக வாழலாம் என்பது குறித்து ஆஸி அரசாங்கம் அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மதத்தலைவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் சிறுபான்மையினத்தவர்கள் தாங்கள் அந்த நாட்டின் சமபிரஜைகளா நடத்தப்படுவதாக கருதும் சூழ்நிலையை உருவாக்குவதற்கும்,இலங்கையை தாங்கள் ஆளலாம், அபிவிருத்தி செய்யலாம் என எண்ணும் நிலையை உருவாக்கவும் ஆஸி முயற்சிகளை மேற்கொள்வதே படகுகள் மூலம் மக்கள் வருவதை தடுப்பதற்கான சிறந்த வழி எனவும் அவர் தெரிவித்தார்.