செய்திகள்

புங்குடுதீவு சம்பவத்தில் அரசியல் செய்ய சிலர் முயற்சி அதனை தடுத்து நிறுத்த வேண்டும் : பாராளுமன்றத்தில் ஜே.வி.பி கோரிக்கை

புங்குடுதீவு மாணவி படு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பயன்படுத்தி அரசியல்வாதிகள் சிலர் மக்களை உசுப்பிவிட்டு அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இது தடுக்கப்பட வேண்டுமெனவும் ஜே. வி. பி கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று பாராளுமன்றத்தில் ஜே. வி. பியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
புங்குடுதீவில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அதேநேரம் சட்டத்தை மக்கள் கையில் எடுப்பதற்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது. கண்டனம் தெரிவிப்பதாகக் கூறி மக்களை உசுப்பிவிட்டு தேர்தல் காலத்தில் தமக்கு அரசியல் லாபம் தேடிக்கொள்ளும் முயற்சிகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
சட்ட ரீதியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதுடன், இச்சம்பவத்தை இனவாதமாகப் பயன்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். அதற்கும் இடமளிக்கக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.