செய்திகள்

புங்குடுதீவு சம்பவம் தொடர்பில் ஒரு தமிழனாக வெட்கி தலை குனிகிறேன் : மனோ கணேசன்

கொடிய இனவாதிகளால் எழுதப்பட்ட கிரிஷாந்தி, இசைப்பிரியா ஆகியோரின் கொடூர வரலாறுகளை எதிர்த்து போராடி களைத்து போய்விட்டு, இன்று உள்ளூரவாசிகளால் புங்குடுதீவின் 18 வயது மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, மிகவும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறியும்போது ஒரு தமிழனாக வெட்கி தலை குனிகிறேன். அதேவேளை இத்தகைய சமூக அக்கிரமங்களுக்கு எதிராக வடக்கில் இளைய தலைமுறை இன்று தெருவில் இறங்கி போராடுவதை வரவேற்கின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இந்த கடத்தல் மற்றும் அதன்பிறகு நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்கள் எழுத்தில் எழுத முடியா கொடூரமானவை. இந்த அக்கிரமக்காரர்களை மன்னிக்க முடியாது. இன்று ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறபடுகிறது. கொழும்புக்கு தப்பி வந்த ஒருவர் வெள்ளவத்தை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இனி இந்த வழக்கு காலதாமதம் இல்லாமல் விரைவில் விசாரிக்கப்பட்டு, கொலையாளிகளுக்கு அதிகபட்ச உச்சகட்ட தண்டனை வழங்கப்பட வேண்டும்.

கடந்த மகிந்த ஆட்சிகாலத்தில் தமிழ் மாகாணங்களில், குறிப்பாக வடக்கில் இளைஞர் மத்தியில் போதைவஸ்து, மதுபாவனை, பாலியல் நடவடிக்கைகள் ஆகியவை திட்டமிட்டு தூண்டி விடப்பட்டன. ஒரு இனத்தை அழித்திட, அந்த இனத்தின் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, வரலாறு என்பவற்றை திட்டமிடப்பட்டு அழிப்பது என்ற உலகெங்கும் ஆதிக்கவாதிகளால் கடைபிடிக்கப்படும் அந்த கொள்கை இலங்கையிலும் கடைபிடிக்கப்பட்டது. அதை மகிந்த கூட்டம், கொழும்பில் அலரி மாளிகையில் திட்டமிட்டு, வடக்குக்கு கொண்டு சென்று அங்கே தன் அடியாட்கள் மூலமாக அமுல் செய்தது.

இன்று மகிந்த ஆட்சி இல்லை. மைத்திரி ஆட்சி வந்து விட்டது. ஆனாலும், இன்னமும் மகிந்த மீண்டும் வருவார் என எண்ணி வடக்கின் போலிஸ் மற்றும் அதிகார வட்டாரம் மெத்தனமாக இருக்கின்றதோ என்ற சந்தேகம் வருகிறது. இது முதல் சம்பவம் அல்ல. கடந்த சில காலமாகவே இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து ஆங்காங்கே தமிழர்கள் மத்தியில் நடக்கின்றன. குறிப்பாக பாடசாலை செல்லும் தமிழ் மாணவிகள் குறி வைக்கப்படுகிறார்கள்.

இன்று இந்த அராஜகங்களை எதிர்த்து நமது இளைஞர்கள் நேரடியாக தெருவில் இறங்கி போராட முன்வந்துள்ளார்கள். இந்த எதிர்ப்பு இயக்கம் இது போன்ற நிகழ்வுகள் இனி நிகழா வண்ணம் தடை போடும் என நம்புகிறேன். எனினும் கொடிய இனவாதிகளால் எழுதப்பட்ட கிரிஷாந்தி, இசைப்பிரியா ஆகியோரின் கொடூர வரலாறுகளை எதிர்த்து போராடி களைத்து போய்விட்ட நிலையில், இன்று உள்ளூரவாசிகளால் இந்த மாணவி கடத்தப்பட்டு, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத முறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, மிகவும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறியும்போது ஒரு தமிழனாக நிச்சயமாக வெட்கி தலை குனிகிறேன். இதன்மூலம் எமது இனத்தை திட்டமிட்டு அழிக்க முயலும் இனவாதிகளை எதிர்க்கும் நமது தார்மீக சக்தி பலவீனமடைகிறது என்ற செய்தியை போராடும் இளைஞர்கள் முன்னெடுக்க வேண்டும்.