செய்திகள்

புங்குடுதீவு மாணவி கொடூரப் படுகொலை! சைவமகாசபை அறிக்கை

புங்குடுதீவில் மாணவிக்கு நேர்ந்த பேரவலம் எந்தவொரு பெண்ணுக்கும் எதிர்காலத்தில் ஏற்படாமலிருக்கும் வகையில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு சைவமகாசபை இன்று வெள்ளிக்கிழமை (15.5.2015)வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் வலியுறுத்திக் கூறியுள்ளது.

புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் கலைப்பிரிவில் கல்வி கற்கும் மாணவி நேற்று முன்தினம் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சைவமகா சபையின் பொதுச் செயலாளர் மருத்துவர் ப.நந்தகுமாரினால் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புங்குடுதீவில் கட்டி வைக்கப்பட்டுக் காமுகர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவிக்கு நேர்ந்த வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடுமைக்கு எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணத்தில் அரங்கேறி வரும் வாள்வெட்டுக்கள்,பள்ளி மாணவர்களுக்குப் போதைப் பொருள் விநியோகம்,பெண்களுக்கெதிரான வன்முறைகள் என்பவற்றின் உச்சக்கட்டமாக மேற்படி மாணவியின் கொடூரக் கொலை இடம்பெற்றுள்ளது.

இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரத் துறைகளின் அசமந்தப் போக்கு இவ்வாறான கொடூரக் குற்றவாளிகளுக்குத் தொடர்ச்சியாக வாய்ப்பளித்து வருகின்றது.

இந்த மாணவிக்கு நேர்ந்த பேரவலம் எந்தவொரு பெண்ணுக்கும் எதிர்காலத்தில் ஏற்படாமலிருக்கும் வகையில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டணை வழங்கப்பட வேண்டும்.

அதேநேரம் கடந்த காலங்கள் போன்று எந்தச் சட்டத்தரணிகளும் இவர்களுக்கு ஆஜராகி வாதிட முன்வரக் கூடாது என்பதையும் இச் சந்தர்ப்பத்தில் வேண்டி நிற்கிறோம்.

மேலும் இப் பள்ளி மாணவிக்கு நடந்த இக் கொடுமைக்கும், பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கும் நீதி கேட்டு அனைத்து அமைப்புக்களும், ஊடகங்களும் தொடர்ச்சியாகப் போராட முன் வர வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றோம்.

போதைப் பொருள் பாவனையுடன் தொடர்புபட்டு நடைபெறுகின்ற இக் கொடுஞ்செயல்களை இல்லாது ஒழிப்பதற்குச் சமூகத்தின் சகல தளங்களிலும் விழிப்புணர்வும், சட்டத்தை அமுல்படுத்துவோரின் தொடர் நடவடிக்கைகளும் இன்றைய காலத்தின் கட்டாய தேவையாகும்.

ஆதலினால் இது தொடர்பாகச் சமூகத்தை விழிப்புணர்வூட்டும் போராட்டங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் எமது சைவமகாசபையின் பெண்கள் பிரிவான சிவமங்கையர் அமைப்பு அனைவரையும் கரம் கோர்க்குமாறு வேண்டி நிற்கிறது.

அத்துடன் மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் துன்பத்தில் நாமும் பங்கெடுத்து நிற்கிறோம்.

யாழ் நகர் நிரூபர்-

Pallimanaviyin kolaikku neethikoral