செய்திகள்

புட்டினின் பிடியிலிருந்து ரஸ்சியா விடுபடும் என்ற நம்பிக்கைகள் குறைவடைந்துள்ளதாக கருத்து

புட்டினை தீவிரமாக விமர்சித்து வந்த பொறிஸ் நெம்சொவ் படுகொலை செய்யப்பட்டுள்ளமை ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடமிருந்து ரஸ்சியா அமைதியா முறையில் விடுதலைபெறும் என்ற நம்பிக்கையை தகர்த்துவிட்டதாக சர்வதேச செஸ் சம்பியனும் ரஸ்சிய எதிர்கட்சிகளின் முக்கிய நபருமான கரி கஸ்பரோவ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நாடுகடந்த நிலையில் வாழும் அவர் இந்த படுகொலைக்கு பின்னர் ரஸ்சியாவின் எதிர்காலம் குறித்து அவநம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ரஸ்சியா சாதாரண ஜனநாயக நாடாக மாற்றமடைவதை காண பொறிஸ் விரும்பினார் என அவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்சியாவின் மிகமுக்கியமான சாத்வீக போராளி என படுகொலைசெய்யப்பட்ட பொறிஸ் நெம்சொவை வர்ணித்துள்ள கஸ்பரோவ்,அடுத்த பத்து வருடத்திற்கு ரஸ்சியா புட்டினின் சர்வாதிகாரத்திலிருந்து விடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மாற்றம் ஏற்படவேண்டுமென்றால் பாரிய வன்முறைகளுடன் கூடிய மக்கள் எழுச்சி மூலமே அது சாத்தியம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் படுகொலை ரஸ்சியா ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை விமர்சிப்பவர்களுக்கான எச்சரிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.