செய்திகள்

புதியவர்களே தேர்தலில் போட்டியிடுவர்: சுதந்திரக் கட்சி தீர்மானம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை புறக்கணித்து செயற்படும் சகல மாவட்ட அமைப்பாளர்களை நீக்க அந்தக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

அத்துடன் பண்டாரநாயக்கவின் கொள்கையின் அடிப்படையில் செயற்படும் புதியவர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்குவது எனவும் ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

ஊழல், மோசடிகள் மற்றும் அவமதிப்பை பெற்றிராத சட்டம், மருத்துவம், கணக்காய்வு, ஊடகம், விளையாட்டு, கலைத்துறை உட்பட நிபுணத்துவ துறைகளைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்குவது என சிறீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட ஆர்வம் கொண்டுள்ள 80 க்கும் மேற்பட்ட புத்திஜீவிகளை தனிப்பட்ட ரீதியில் அவ்வப்போது சந்தித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் பேரனான பிரதீப் ஜெயவர்தன, அமைச்சுகளில் உயர் பதவிகளை வகிக்கும் சில அதிகாரிகளுக்கும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சில விரிவுரையாளர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகளை வழங்க ஜனாதிபதி ஏற்கனவே தீர்மானித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.