செய்திகள்

புதிய அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்: ஐரோப்பிய ஒன்றிய பதில் பணிப்பாளர்

குறுகிய காலத்தில் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அறிவிப்புக்கள் சாதகமாக அமைந்திருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கம் தற்பொழுது பயணிக்கும் பாதை சாதகமானதாக அமைந்துள்ளமையை காணக்கூடியதாக இருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு சேவைகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் பணிப்பாளர் உகோ அஸ்டுடோ தெரிவித்தார். இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான இணைந்த ஆணைக்குழுவின் 19வது கூட்டம் நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

இதில் ஐரோப்பிய ஒன்றியக் குழுவுக்குத் தலைமைதாங்கியிருந்த உகோ அஸ்டுடோ நேற்றுமாலை ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டிருந்தார். இதில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான அறிக்கையைப் பிற்போடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியமும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.

மனித உரிமை விவகாரத்தில் தமது அர்ப்பணிப்பை வெளிக்காட்டுவதற்கு புதிய அரசாங்கத்துக்குப் போதியளவு கால அவகாசம் வழங்கப்படவேண்டும். இதனாலேயே தாம் இதற்கு ஆதரவு வழங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். வெளிப்படைத் தன்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவதன் ஊடாகவே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். புதிய அரசாங்கம் எடுத்திருக்கும் சில நடவடிக்கைகள் இதற்கு சாதகமாக அமைந்திருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.

மனித உரிமை விசாரணைகளுக்கு உள்ளகப் பொறிமுறையை நடைமுறைப் படுத்துவதாக அரசாங்கம் கூறியுள்ளது. அனைத்து நடவடிக்கைகளும் சாதகமாக அமையும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். ஐ.நாடுகள் சபையின் உறுப்புரிமைகளை நிறைவேற்றும் பட்சத்தில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கை மீளப்பெறமுடியும். இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகக் குழுவுக்கும் இலங்கைகக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்தும் இது விடயம் குறித்து ஆராயப்பட்டு தீர்மானம் ஒன்று எடுக்கப்படும். எனினும் இதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.