புதிய அரசின் மீதான ஐ.நா.வின் நம்பிக்கையை பாதுகாப்போம்: அமைச்சர் கிரியெல்லை
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை இலங்கை குறித்த விசாரணை அறிக்கையை பிற்போட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல . இந்நிலையில் அரசாங்கத்தின் மீது சர்வதேசம் வைத்துள்ள நம்பிக்கையை அரசாங்கம் நிறைவேற்றும் எனவும் உறுதியளித்திருக்கின்றார். .
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து புதிய அரசாங்கம் உள்ளக விசாரணையை முன்னெடுக்கும். கடந்த மகிந்த ராஜபக் ஷவின் அரசாங்கம் உள்ளக விசாரணையை முன்னெடுப்பதாக உறுதியளித்துவிட்டு அதனை நிறைவேற்றாததன் காரணமாகவே சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவிருந்த இலங்கை மனித உரிமை மீறல் குறித்த விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டுள்ளமை தொடர்பில் விபரிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில் தெரிவித்ததாவது:
“ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் விசாரணை அறிக்கையை ஆறு மாதங்களுக்கு பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக இலங்கையின் புதிய அரசாங்கம் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது. எனவே சர்வதேச சமூகம் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை புதிய அரசாங்கம் நிறைவேற்றும். அதற்காக மனித உரிமை மீறல்கள் குறித்து உள்ளக விசாரணையை முன்னெடுப்போம். அதாவது சர்வதேச சமூகம் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் பாதுகாப்போம்.
இதேவேளை ஆரம்பத்தில் உள்ளக விசாரணையை முன்னெடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமே உறுதியளித்தது. ஆனால் உள்ளக விசாரணையை முன்னெடுப்பதாக உறுதியளித்துவிட்டு அதனை நிறைவேற்றாததன் காரணமாகவே சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நாங்கள் வழங்கியுள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவோம்” என்றார்.