செய்திகள்

புதிய அரசியலமைப்பில் தீர்வு வருமா?வராதா?

காலகண்டன் 

இவ்வார முற்பகுதியில் பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது தற்போதைய அரசியலமைப்பை மாற்றிப் புதிதாக வரைவது அல்லது தேவையான திருத்தங்களைச் செய்துகொள்வது மேற்படி அரசியல் நிர்ணய சபையின் பணியாகும். இதற்கான தீர்மானம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது. இத்தீர்மானத்திற்கான முன்மொழிவில் ஒரு முகவுரை ஆரம்பத்தில் காணப்பட்டது. அதில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது. தேர்தல் முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வருதல். தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுத்தல் என்பதாகவே இருந்தது.

ஆனால், இம் முகவுரையுடன் அரசியலமைப்பு நிர்ணய சபையாகப் பாராளுமன்றத்தை மாற்றியமைக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை. ஆளும் தரப்பினர் மத்தியில் இம் முகவுரை பற்றிய முரண்பட்ட நிலை காணப்பட்டது. இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலையிட்டு அம் முகவுரையை அகற்றியதன் மூலம் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டார். அம்முகவுரையில் காணப்பட்ட விடயம், மூன்றாவதாகக் கூறப்பட்டிருந்த தேசிய  இனப் பிரச்சினைக்குத் தீர்வு என்ற விடயமேயாகும்.

அதாவது ஆளும் தரப்பில்  பேரினவாதம் என்பது மிகவும் கெட்டியாக இருந்து வருவதுடன், மிகக் கவனமாகவும் இருந்து  வருவதையே மேற்படி விடயம் தெளிவாக எடுத்துக் காட்டி இருக்கிறது. ஆனால், இது பற்றித் தமிழ்த் தேசிய வாதத் தரப்புகள் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இறுக்கி வாய் மூடிக் கொண்டனர். தற்போது உருவாக்கப்பட்டுள்ள அரசியல் நிர்ணய சபையின் உப தலைவர்களில் ஒருவராக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்றக் குழுக்களின் உப தலைவரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அதேபோன்று அரசியல் நிர்ணய சபையின் வழிகாட்டல் குழு 21 உறுப்பினர்களைக் கொண்டு தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் தலைமையிலான இக் குழுவில் இரா. சம்பந்தனும் எம்.ஏ. சுமந்திரனும் உறுப்பினர்களாக உள்ளனர்.

இவர்களைப் போன்று முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழர் பிரதிநிதிகளும் இவ் வழிகாட்டல் குழுவில் இடம்பெறுகின்றனர். அவர்களில் டி.எம். சுவாமிநாதன், மனோ கணேசன் ஆகியோர் உள்ளடங்குவர். இவ்வாறு அனைத்து கட்சிகளில் இருந்தும் அரசியல் நிர்ணய சபையின் குழுக்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் மகிந்த தரப்பு தனி நிலையில் இருந்து வருகிறது. அவர்களது பிரதான எதிராயுதம் இனவாதமாக இருந்து வருகிறது. அவர்களது பேரினவாத நிலைப்பாடு ஆளும் தரப்பினர் மத்தியிலும் வெவ்வேறு   நிலைகளில் தாக்கம் செலுத்தி வருகிறது.

இத்தகைய ஒரு சூழலிலேயே புதிய அரசியலமைப்புக்கான அரசியல் நிர்ணய சபை செயற்பட ஆரம்பித்திருக்கிறது. விவாதிக்கப்படவும் இறுதியில் நிறைவேற்றப்படவும் உள்ள புதிய அரசியலமைப்பு எந்தளவிற்கு நாடும் மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குப் பரிகாரமோ, தீர்வோ கண்டுகொள்ளப் போகிறது என்பதே பிரதான கேள்வியாகும். அடிப்படைப் பிரச்சினையான பொருளாதாரப் பிரச்சினைக்கு அதாவது ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கும் சுரண்டிச் சுகபோக  வாழ்வு நடத்தி வரும் உயர்வர்க்க மேட்டுக்குடிகளுக்குமிடையிலான முரண்பாட்டிற்கு புதிய அரசியலமைப்பு எத்தகைய தீர்வுகளை முன்வைக்கப் போகிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். அடுத்தது நாட்டின் பிரதான பிரச்சினையாக இருந்து வரும் தேசிய இனப் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வு காணப்படப் போகிறது என்பது உற்று நோக்க வேண்டியதாகும்.

நாட்டில் தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறைகளை பௌத்த சிங்களப் பேரினவாத ஆளும் தரப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்ததன் விளைவே தேசிய இனப் பிரச்சினையாகும். அதன் காரணமான இன வன்முறைகளும் உரிமை மறுப்புகளும் திட்டமிட்ட இன ஓரங்கட்டல்களும் அகிம்சைப் போராட்டங்களில் இருந்து ஆயுதப் போராட்டங்களாகின. இறுதியில் அவற்றின் நீட்சியானது கொடிய யுத்தத்திற்கும் கோர அழிவுகளுக்கும் இட்டுச் சென்றது. நிறைவேற்று அதிகாரத்திற்கு வந்தவர்களில் சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவைத் தவிர, வேறு எவரும் தேசிய இனப்பிரச்சினை என ஒன்று இருப்பதை ஏற்கவில்லை.

ஆனால், சந்திரிகா அம்மையார் பதவிக்கு வரும் முன்பு பேசிய  அளவுக்கு பதவிக்கு வந்த பின்பு அதற்கான தீர்வைக் கொண்டுவந்து நிறைவேற்ற இயலவில்லை. அவர் முன்வைத்த தீர்வுப் பொதியானது பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினரால் எரிக்கப்பட்ட போது இன்றைய நல்லாட்சியின் பிரதமர் எதிர்க் கட்சி வரிசையில் சிரித்தவாறு இருந்தார் என்பது நினைவில் கொள்ள வேண்டியதாகும். அந்தப் பொதியினைப் பாõராளுமன்றத்தில் முன்வைக்குமாறு அன்று மகிந்த ராஜபக்ஷவை சந்திரிகா  கேட்டபோது அது தன்னால் முடியாது என்று மறுத்துக்கொண்டமையும் வரலாற்றுப் பதிவாகும்.

1995 இல் சந்திரிகாவின் வழிகாட்டலில் சிங்கள,  தமிழ், முஸ்லிம் புத்திஜீவிகளும் சட்ட நிபுணர்களும் சேர்ந்து தயாரித்த முதலாவது தீர்வுப் பொதியானது கனதிமிக்கதாகவே காணப்பட்டது. அதன் ஆரம்ப அம்சங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பின் நிலைமைகள் ஒரளவுக்குத் தணிவுக்கு வந்திருக்கும். அந்தப் பொதியின் கனதியைக் குறைப்பதில் சந்திரிகாவைச் சுற்றி இருந்த பேரினவாதிகள் மும்முரமாகி முன்னின்றனர். அவர்களில் சட்ட நிபுணத்துவம் கொண்ட ஜி.எல்.பீரிஸ் தனது முழுக் குள்ளத்தனத்தையும் பயன்படுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவை பழங்கதையாகினும் பட்டறிவுக்குரியவையாகும்.

இதன் அடிப்படையிலேயே மகிந்தவானவர் தனது ஒன்பது வருட ஃபாசிச ஆட்சியில் தப்பித் தவறிக் கூட தேசிய இனப் பிரச்சினை என்பதை உச்சரித்தது கிடையாது. அதன் தொடர்ச்சி தான் இப்போது நல்லாட்சியிலும் தேசிய இனப் பிரச்சினை என்பது உச்சரிக்கப்படாது நல்லெண்ண நடவடிக்கைகள்  என்று மிக மறைவாகக் கூறப்படுகிறது. இந்த நல்லெண்ண முயற்சிகள் என்பது தேசிய இனப் பிரச்சினைக்கு எவ்விதத் தீர்வையும் கொண்டுவந்து விடப் போவதில்லை.

1947 இல் கொலனிய வெள்ளைத்துரை மாரினால் கொண்டு வரப்பட்ட வெஸ்ட் மின்ஸ்ரர் முறைமையின் கீழான அரசியல் யாப்பு தேசிய இனங்களுக்கு எதனையும் வழங்கவில்லை. அதில்  29 ஆம் சரத்து சிறுபான்மையோருக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறிய தமிழர் தரப்பு, மேட்டுக்குடி அரசியல் சக்திகள் தமது கொலனிய எசமான் விசுவாசம் காரணமாக ஆதரித்தனர். அதன் மூலம் பாராளுமன்றம் செல்லும் தமது ஆவலைப் பூர்த்தி செய்து கொண்டனர். அதன் பின் கொண்டுவரப்பட்ட  1972   இன் புதிய அரசியலமைப்பை தமிழரசுக் கட்சி தனது ஆறு அம்சக் கோரிக்கையை முன்வைத்து அது சிறிமாவோ தலைமையிலான ஆட்சியால் நிராகரிக்கப்பட்ட போது அரசியல் நிர்ணய சபையைப் பகிஷ்கரித்துக் கொண்டது.

பாராளுமன்ற இடதுசாரி ஜாம்பவானான கொல்வின் ஆர்.டி. சில்வா தலைமையிலான அன்றைய அரசியலமைப்பு வரைவுக் குழு, தேசிய இனப் பிரச்சினையைப் புறந்தள்ளியது. ஆகக்குறைந்த அளவில் தானும் தனது கணவனான எஸ்.டபிள்யூ. ஆர். டி.பண்டார நாயக்காவிற்கும் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்திற்குமிடையிலான ஒப்பந்தத்தின் பகுதிகளை அவ்வரசியலமைப்பில் இடம்பெற்ற வைத்திருந்தால் பிற்கால அழிவுகளை நாடு தவிர்த்திருக்க முடிந்திருக்கும். அதன்பின் 1978 இல் ஜே.ஆரினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பும் தேசிய இனப் பிரச்சினையை கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை.

தனது அமெரிக்க சார்பு கொள்கை நிலையிலும் பேரினவாதத் திமிர்த்தனத்தாலும் ஆறில் ஐந்து பாராளுமன்றப் பெரும்பான்மை அகங்காரத்தாலும் போர் எண்ண நிலைப்பாட்டாலும் அரசியலமைப்பில் தேசிய இனப் பிரச்சினைக்கு எவ்விதப் பரிகாரத்தையும் முன்வைக்கவில்லை. பதிலுக்கு  1977 இல் இனவன்முறையினைத் தொடக்கியது மட்டுமன்றி இன்று வரையான கொடுமைச் சட்டமாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கர்த்தாவாகவும் ஜே.ஆர். இருந்து கொண்டார். அவரது மருமகனும் அரசியல் வாரிசுமே இன்றை பிரதமர் ரணில் விக்கிரம சிங்க என்பது குறிப்பிட வேண்டியதாகும்.

இத்தகைய பாரம்பரிய, பேரினவாத நிலைப்பாடு கொண்ட மைத்திரி  ரணில் தலைமையிலான, யானையும் வெற்றிலையும் இணைந்து நிற்கும் நல்லாட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் தரப்புகளும் மலையகத் தமிழர் கட்சியினரும் இணைந்து நிற்கின்றனர். இவர்களது பாராளுமன்ற  எண்ணிக்கை 45 க்கு மேற்பட்டதாகும்.

ஆனால், இவர்களால் அமைச்சுப் பதவிகள், எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் பதவிகளை மட்டுமன்றி இந்தக் கனவான்களின் சிபார்சுகளால் ஏனைய  உயர் பதவிகளும் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. ஆனால், மேற்படி மூன்று தேசிய இனங்களையும் சேர்ந்த சாதாரண மக்கள் வாழ்வு அவலங்களுடனேயே தொடர்கிறது. இத்தகையோரால் அரசியல் நிர்ணய சபை மூலம் எவற்றைப் பெற முடியும். குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சியின் உற்ற நண்பனாக இருந்து வருகிறது.

ஆனால், சாதிக்கப் போவது என்ன ? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கதம்பக் கச்சேரி அரசியலமைப்பிடம் தமிழ்த் தேசியம் என்ற உச்சரிப்புக்கு அப்பால் எதுவும் இல்லை. அது ஒரு நெல்லிக்காய் மூட்டை போன்ற, கொள்கை கோட்பாடற்ற பாராளுமன்ற மற்றும் மாகாண சபை, உள்ளூராட்சிச் சபைகளில்  பதவிகள் பெறுவதற்கான கட்சிகளின் கூட்டமைப்பேயாகும்.

அதனிடம் பிற்போக்குத் தமிழ்த் தேசியத்தை அவ்வப்போது பரவசம் ஊட்டும் வகையில் பேச்சு , உடை, நடை, பாவனையின் மூலம் வெளிக்காட்டிக் கொள்வார்கள் . இதனையே தமிழின் உயர்வாகவும் தமிழர் வாழ்வின் மேன்மையாகவும் அரசியல் அறியாமை கொண்டோர் “சிக்கெனப்’ பிடித்துக் கொள்வர். இது தமிழ்த் தேசிய வாத நடுத்தரப் புத்திஜீவிகளுக்கு வாய்ப்பானதாக அமைந்து கொள்ளும். அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்குரிய ஆதிக்க அரசியலாக்கிக் கொள்கிறது.

அகிம்சைப் போராட்டம், ஆயுதப் போராட்டம் என்பன பயனற்றுப் போனது மட்டுமன்றி, அவற்றால் மக்கள் பல்லாயிரம் பேர் இறப்புகளையும் இழப்புகளையும் தேடிக் கொள்ளவே நேரிட்டது.

இவற்றுக்கு தெற்கின் பேரினவாத ஆளும் வர்க்கம் மட்டுமன்றி வடக்கின் குறுந்தேசியப் பிற்போக்குத் தலைமைகளும் அவற்றின் கொள்கைகளும் காரணம் என்பதை மறந்து விட முடியாது. முள்ளிவாய்க்கால் அழிவுக்குப் பின் விரக்தியுற்று இருந்த வடக்கு, கிழக்கு மக்களுக்கு புதுவகை ஏமாற்றினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்து வந்தனர். இதோ சர்வதேசம் வரப்போகிறது  ஐ.நா. சும்மா விடமாட்டாது ; அமெரிக்கா பார்த்துக் கொண்டிருக்காது ; ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேறுகிறது  மேற்கில் இருந்து இலங்கை வரும் வெள்ளைத் தோல் எசமானர்கள் யாழ்ப்பாணம் வரத் தவறுவதில்லை. அவர்கள் சம்பந்தன் ஐயாவையும்  கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் தவறாது சந்திப்பர்.

அதிகூடிய வெப்ப நிலையிலும் தமது எசமானர்களைக் குளிர்விக்க கூட்டமைப்பின் தலைவர்கள் கோட் சூட் அணிந்து பவ்வியமாகத் தமது நிலைப்பாட்டைத் தெரிவிப்பார்கள். தமிழ் மக்கள் முன்வரும் போது அகலக் கரைவேட்டியும் உத்தரிகமும் வெற்றி விழாவில் முடிவேல் தரித்து நிற்கும் இம் மேட்டுக்குடிப் பிரதிநிதிகள் வெள்ளைத் தோல் நவகொலனியத் தலைவர்களுக்கு முன்னால் கோட் சூட்டுடன் நிற்பார்கள். இது அவர்களது கொலனிய அடி பணிவுச் சிந்தனையின் வெளிப்பாடாகும். இதுமட்டுமன்றி அவ்வாறு இங்கு வருகை தரும் மேற்கத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் முன்னால் எமது மக்களைக் குழறி அழ வைத்தும் கொள்வார்கள். குறிப்பாகத் தாய்மார்களை அழவைத்து அவற்றை படம் பிடித்து ஊடகங்களில் வெளிவர வைத்தும் கொள்வார்கள்.

அதேவேளை  நமது தொப்புள் கொடி உறவு கொண்ட இந்தியா எங்களைக் கைவிடாது என்றுகூறித் தமது இந்திய விசுவாசத்தைக் குறைவடைய விடாது வைத்தும் கொள்வார்கள். ஆனால், இறுதி யுத்தத்தின் போதும் அதனைத் தொடர்ந்து மேற்குலக நாடுகளும் ஐ.நா.வும் இந்தியாவும் எவ்வாறு தமது காய்களை நகர்த்திக் கொண்டன என்பதை அரசியல்  ஆர்வமும் அறிவும் கொண்ட தமிழ் மக்கள் நன்கு அறிவர்.

இந்நிலையில் தற்போதைய நல்லிணக்க அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து நல்லிணக்கத்துடன் பதவிகள் பெற்று நிற்கின்றது. இவ்வருட நடுப்பகுதியில் அரசியல் தீர்வு நிச்சயம் பெறப்படும் என இரா.சம்பந்தன் கடந்த வருடத்தில் உறுதியளித்துள்ளார். அண்மையில் கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் விரைவில் சம்பந்தன் ஐயா தலைமையில் சமஷ்டியிலான அரசியல் தீர்வு கிடைக்கும் என எதிர்வு கூறியுள்ளார். வடக்கில் சமஷ்டித் தீர்வையே முதலமைச்சர் வற்புறுத்தி வருகிறார்.  அதனை இந்தியா பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

ஆனால், மாவை சேனாதிராஜாவோ, எம்.ஏ. சுமந்திரனோ தெளிவாக எதனையும் கூறாது பம்பிக் கொண்டு இருக்கிறார்கள். அதேவேளை சுரேஷ் பிரேமச்சந்திரன் பதவிகள் எதுவும் இல்லாத நிலையில் கூட்டமைப்புப் பிரதிநிதியாக இல்லாது ஈ.பி.ஆர்.எல்.எவ். பெயரில் பேசி வருகிறார். அதனால் அவரது பேச்சில் கூட்டமைப்புத் தலைமை பற்றிய விமர்சனங்கள் பொதிந்து காணப்படுகின்றன.

எவ்வாறாயினும் புதிய அரசியலமைப்பின் ஊடாகத் தீர்வு ஏதாவது வருமாக இருந்தால் எல்லோருக்கும் நன்மையானதாகும். ஆனால்,  அத் தீர்வு அரைகுறையின்றியும் தேசிய இனங்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வாகவும் அமையுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேணடும்.  ஏனெனில்  ஆளும் தரப்பிலும் எதிர்த் தரப்பிலும் இருப்போர் எவரும் புதியவர்களோ மாற்றுக் கொள்கையும் புதிய சிந்தனைகளும் கொண்டவர்களோ அல்லர் என்பது நோக்குதற்குரியதாகும்.

 n10