செய்திகள்

புதிய அரசியலமைப்பு மகிந்தவுடன் கலந்துரையாடிய ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான சந்திப்பொன்று கடந்த வாரம் இடம்பெற்றிருக்கும் நிலையில் சீனப் பயணம் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பாக ராஜபக்ஷவுடன் பிரதமர் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.

சீனாவிற்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  பிரதமருடன் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் முன்னாள் ஜனாதிபதியுடன் மக்கள் ஐக்கிய முன்னணி தலைவர் தினேஸ் குணவர்தன எம்.பி.யும் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக நீடித்த இக்கலந்துரையாடலில் தனது சீனப் பயணம் குறித்து ராஜபக்ஷவுக்கு ரணில் எடுத்துரைத்திருக்கிறார்.

ஏற்றுமதி செயலாக்க வலயம், துறைமுகம் விமான நிலையம் என்பனவற்றை அம்பாந்தோட்டையில் ஏற்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்படுவது முக்கியமான விடயமென பிரதமர் கூறியிருக்கிறார். இது மற்றொரு சாதகமான விளைவை ஏற்படுத்துமெனவும் அவர் தெரிவித்த நிலையில் விக்கிரமசிங்கவின் கருத்துகளை ராஜபக்ஷ அங்கீகரித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதே அரசாங்கத்தினால் முக்கிய கவனம் செலுத்தப்படும் விடயமென பிரதமர் ராஜபக்ஷவிடம் கூறியுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல், பாராளுமன்ற முறைமையை வலுப்படுத்துதல், அதிகளவுக்கு அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்துதல் ஆகியவை புதிய அரசியலமைப்பில் கவனம் செலுத்தப்படவுள்ள முக்கிய விடயங்களென முன்னாள் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டதுடன் தேர்தல் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காலத்தை எடுப்பவையாக இருப்பதாகவும் ஆயினும் இதற்கு முன்னுரிமை கொடுக்கப்படுமெனவும் எடுத்துரைத்திருக்கிறார்.

இந்நிலையில் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட பாதுகாப்பிலிருந்தும் இராணுவத்தை வாபஸ் பெறும் விடயம் தொடர்பாக தினேஷ் குணவர்தன எம்.பி. கதைத்திருக்கிறார். முன்னாள் ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல்கள் அதிகமாக இருக்கும் தருணத்தில் இந்த நகர்வு இடம்பெற்றிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயத்தை ஜனாதிபதி சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தேசிய பாதுகாப்பு சபையில் எழுப்புவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பான மற்றொரு அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் இது தொடர்பாக மேலும் ஆராயப்படுமெனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இது இவ்வாறிருக்க பிரதமர் விக்கிரமசிங்கவுக்கும் கூட்டு எதிரணிக்குமிடையில் அரசியலமைப்பு தயாரிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கருத்தொருமைப்பாடு ஏற்பட்டிருப்பதாக தென்படுகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழுமையாக ஆதரவை வழங்குவோம் என்று தினேஷ் குணவர்தன எம்.பி. சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு கூறியுள்ளார்.

குழுக்கள் சிலவற்றிற்கு தலைமைப் பதவி வழங்க முன்மொழியப்பட்டிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். கூட்டு எதிரணி உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படாவிடிலும் அதிக நேரம் உரையாற்றுவதற்கும் இப்போது அரசியலமைப்பு தொடர்பான விடயங்களை வடிவமைக்கும் குழுக்களில் பணியாற்றவும் இக்கூட்டு எதிரணிக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

n10